பதஞ்சலி ஆயுர்வேத் தன்னுடைய தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிட்டதைக் கண்டித்த சுப்ரீம் கோர்ட், பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்-க்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்த நீதிமன்றத்தை அவமதித்த பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனர் பாபா ராம்தேவ் நீதிமன்றத்தின் கட்டுக்குப்பிடியால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் என பல பிரச்சனைகள் பதஞ்சலி நிறுவனத்தைச் சுற்றி வரும் வேளையில் பதஞ்சலி நிறுவனத்தில் புதிய மாற்றம் நடக்க உள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவிய பதஞ்சலி குழுமத்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு மத்தியிலேயே வர்த்தகம் கைமாற உள்ளது. டூத்பேஸ்ட், எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்ற அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் இந்த வர்த்தகத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாபா ராம்தேவ் அவர்களால் நிறுவப்பட்ட மற்றொரு நிறுவனமான பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த அத்தியாவசிய பொருட்கள் பிரிவை வாங்குவதற்கான திட்ட அறிக்கையும் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இரு நிறுவனங்கள் மத்தியில் நடந்த விருப்ப விண்ணப்பம், நிர்வாக குழுவில் நடந்த ஆய்வுகள் என அனைத்தும் பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில், பதஞ்சலி ஆயுர்வேதம் லிமிடெட் நிறுவனத்தின் அத்தியாவசிய பொருட்கள் பிரிவை வாங்குவதற்கான திட்டம் ஆலோசிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஆராய்ந்து, இரு நிறுவனங்களின் அத்தியாவசிய பொருட்கள் பிரிவுகளை இணைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மதிப்பீடு செய்ய இயக்குநர்கள் குழு முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
1986 இல் உருவான ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ஐ பதஞ்சலி வாங்கியதன் மூலம் பதஞ்சலி ஃபுட்ஸ் உருவானது. தற்போது நாட்டின் முன்னணி FMCG துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் பதஞ்சலி, ருச்சி கோல்ட், நியூட்ரேலா போன்ற பிராண்டுகளின் வழியாக சமையல் எண்ணெய், உணவு மற்றும் எஃப்எம்சிஜி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி பிரிவுகளில் செயல்படுகிறது.
பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புக்களின் வகையை அதிகரிக்க இதுவரை பல பிராண்டுகள், பல நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது. பதஞ்சலி ஃபுட்ஸ் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் Patanjali Natural Biscuits Private Limited நிறுவனத்தின் பிஸ்கட் பிரிவை ரூ.60.03 கோடிக்கும், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நூடுல்ஸ் மற்றும் பிரெக்ஃபாஸ்ட் சீரியல் பிரிவை ரூ.3.50 கோடிக்கும், 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் பிரிவை ரூ.690 கோடிக்கும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் தான் தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் தற்போது பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் டூத்பேஸ்ட், எண்ணெய், சோப்பு, ஷாம்பூ போன்ற அத்தியாவசிய பொருட்களின் தயாரிப்புகளை வாங்க உள்ளது.


Click it and Unblock the Notifications