இந்தியாவில் தற்போது வேலை வாய்ப்பின்மை பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் அதிக ஊதியத்தை எதிர்பார்ப்பது சரியல்ல என ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படித்தவர்கள் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் கோடி ரூபாய் சம்பளத்திற்கு கேம்பஸ் மூலம் வேலைவாய்ப்பு பெற்றனர் என்ற செய்தியை நாம் அவ்வப்போது கேட்டிருப்போம்.

பொதுவாகவே இந்தியாவில் ஐடி துறை சார்ந்த வேலை செய்யக் கூடியவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது. குறிப்பாக நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஐடி படித்தவர்கள் எல்லாம் பல லட்சங்களில் கோடிகளில் ஊதியம் பெறுகின்றனர் என்ற பிம்பம் இருக்கிறது. இது தொடர்பாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் அபிஷேக் நாயர் என்ற ஒரு தொழில்நுட்ப நிபுணர் இளநிலை படிப்பை முடித்துவிட்டு ஐடி துறையில் வேலை தேடுபவர்கள் ஆண்டுக்கு 3.6 லட்சம் ரூபாய் ஊதியத்தை ஏற்க மறுப்பது சரியல்ல எனக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அபிஷேக் நாயர் இந்தியாவில் இரண்டாம் நிலை கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெரிய அளவில் ப்ரோக்ராமிங் திறன் இல்லாமல் வேலை தேடக்கூடிய நபர்கள் ஆண்டுக்கு 3.6 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கக்கூடிய வேலைகளை ஏற்றுக் கொள்வது தான் சிறந்தது எனக் கூறியிருக்கிறார்.
புரோகிராமிங் திறமைகள் ஏதும் இல்லாமல் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் ஊதியம் தரக்கூடிய வேலை வாய்ப்பினை எதிர்பார்க்க வேண்டாம். உங்களுடைய கல்வி தகுதியே இளநிலை பொறியியல் படிப்பு தான் எனும் போது நீங்கள் அதிக ஊதியத்தை எதிர்பார்ப்பது சரியல்ல என அவர் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு சுமார் 12 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாக பதிவு செய்துள்ளனர்.
ஒரு பயனர் முதல் நிலை கல்வி நிறுவனங்களில் படிப்பவர்கள் மட்டுமே 1 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதற்கு தகுதியானவர்கள் ,மற்ற நகரங்களில் பயில கூடியவர்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்ற உங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
நான் இந்தியாவில் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படித்துவிட்டு தற்போது மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறேன், என்னிடம் இந்தியாவை சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் எல்லாம் நேர்காணலுக்கு வருகிறார்கள், அவர்களிடம் எந்த ஒரு பிராக்டிகல் அறிவும் இல்லை என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் எந்த கல்லூரியில் படிக்கிறீர்கள் உங்களுக்கு கோடிங் பற்றிய அறிவு எவ்வளவு இருக்கிறது என்பதெல்லாம் தற்போது ஒரு விஷயமே கிடையாது கோடிங்கில் உங்களுடைய திறனை எவ்வளவு வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம் எனக் கூறியுள்ளார். ஒரு நபரின் திறமையையும் வெற்றியையும் அவர் படித்த கல்லூரியை மட்டுமே கொண்டு மதிப்பிட முடியாது என தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள அபிஷேக் நாயர் குறைந்த சம்பளத்திற்கு தான் நீங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என நான் கூறவில்லை. நீங்கள் இளநிலை படிப்பு தான் படித்திருக்கிறீர்கள் எனும் போது தற்போதைய காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.6 லட்சம் ரூபாய் சம்பளம் என்பதே பொருத்தமானது தான்.
அதில் சென்று உங்களுடைய திறமையை வளர்த்து படிப்படியாக முன்னேறுங்கள் என்று தான் நான் கூறுகிறேன் எனக் கூறி அவர் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications