உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தற்போது அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு டிரம்ப்-ஐ வெற்றிபெற வைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவரின் முயற்சிக்கு பெரும் பலமாக இருப்பது அவர் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய டிவிட்டர். அமெரிக்காவில் என்னவோ X பெரிய அளவில் கல்லா கட்டினாலும், இந்தியாவில் தரைதட்டி நிற்கிறது.
முன்பு ட்விட்டராக இருந்த எக்ஸ் நிறுவனம் 2024ஆம் நிதியாண்டுக்கான வருவாய் மற்றும் லாப விபரங்களை கார்ப்ரேட் விவகாரத் துறையில் சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் Twitter Communications Pvt Ltd என்ற பெயரில் இயங்கி வரும் எக்ஸ் 2024ஆம் நிதியாண்டில் கடுமையான லாபம் மற்றும் வருவாய் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிறுவனத்தின் இந்திய டிவிட்டர் பிரிவின் வருவாய் கிட்டத்தட்ட 90% குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.207.7 கோடியிலிருந்து தற்போது ரூ.21.1 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், அதன் லாபமும் ரூ.30.4 கோடியிலிருந்து 90 சதவீதம் குறைந்து ரூ.3.1 கோடியாக உள்ளது.
எலான் மஸ்க் நிர்வாகம் டிவிட்டரை கையில் எடுத்த பின்பு இந்திய வர்த்தகத்தில் இருந்து கிட்டத்தட்ட 90% பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் பின்பாகவும் இந்த கடுமையான நிதி சரிவு பதிவாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது டிவிட்டர் நிறுவனத்திற்காக வெறும் 12 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள் இவர்களுக்கான சம்பளம் மற்றும் செலவுகள் வெறும் 6.2 கோடி ரூபாய் மட்டுமே. கடந்த ஆண்டு இப்பிரிவின் செலவு 130.1 கோடி ரூபாயாக இருந்தது நிலையில் தற்போது செலவுகள் 95% குறைந்துள்ளது.
நிறுவனத்தின் இயக்குர்கள் குழு இப்போது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது, ஒருவர் அனுப் அசோக் மலாஷெட்டி, மற்றொருவர் ஆசிய பசிபிக் தலைவரான வின்ஸ்டன் செய் செங் பூ.
எலான் மஸ்க் டிவிட்டரைக் கையில் எடுத்த பின்பு டிவிட்டர் கணக்குகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட வெரிபிகேஷன் பேட்ச்-கள் காசு கொடுத்துப் பெற வேண்டிய நிலை உருவானது, இதில் பெருமளவில் டிவிட்டர் நிர்வாகம் சம்பாதித்தாலும் வருவாய் மற்றும் லாபம் சரிந்துள்ளது.
இந்தியாவில் சுமார் 2.5 கோடி கணக்குகளைக் கொண்டு டிவிட்டர் தளம் இயங்கினாலும், உலகளவில் இந்தியா எக்ஸுக்கு சிறிய சந்தையாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications