மும்பை: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் சுமார் 4000 கோடி ரூபாயை திரட்ட உள்ளதாக பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்ந்தன.
வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கூடிய விரைவில் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் பல முதலீட்டு வங்கிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தங்களது நிறுவனத்தின் வாரிய குழு கூட்டத்திலும் ஐபிஓ வெளியீட்டுக்கு ஒப்புதல் கிடைத்ததாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

பங்குச்சந்தை சூழ்நிலைகள் மற்றும் செபி ,மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்கு சந்தை மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றின் ஒப்புதலைப் பொறுத்துதான் இந்த ஐபிஓ வெளியீட்டானது இருக்கும் என பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போதைக்கு பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் புதிதாக பங்கு வெளியீடு மற்றும் ஏற்கனவே இருக்கும் பங்குகளை Offer for Sale என்ற முறையில் விற்பது என ஆகிய இரண்டு நடைமுறைகளில் ஐபிஓ வெளியீடு செய்து 4000 கோடி ரூபாயை திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த தகவல் வெளியானதை அடுத்து ஜூன் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மும்பை பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டதட்ட 5% சதவீதம் வரை உயர்ந்தது. அதாவது நாள் வர்த்தகத்தில் ஒரு பங்கின் விலை 7,298 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 51 % பங்குகளை கொண்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி எந்த ஒரு வங்கி சாராத நிதி நிறுவனமோ அல்லது 50,000 கோடி ரூபாய்க்கு கீழ் சொத்து மேலாண்மையில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு தொழிலோ மேலடுக்கு என்பிஎப்சி நிறுவனமாக மாற வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும். எனவே அதற்கான நடவடிக்கைகளில் தான் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவன ஐபிஓ பங்குச்சந்தை முதலீட்டாளர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படும் ஒரு ஐபிஓ ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications