உள்நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூடிய விரைவில் சிஎன்ஜி இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது தொடர்பாக பஜாஜ் நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள தகவலின் படி சிஎன்ஜி-யிலும் இயங்கக் கூடிய இந்த இருசக்கர வாகனமானது ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜ் ஆகியோர் முன்னிலையில் பஜாஜ் ஆட்டோவின் புதிய சிஎன்ஜி இருசக்கர வாகனமானது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Bruzer என்ற பெயரின் கீழ் இந்த இருசக்கர வாகனம் சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்தாலும் எந்த பெயரில் வாகனம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பதை நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த இருசக்கர வாகனத்தை பொறுத்தவரை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு எரிபொருள்களிலும் இயங்கக் கூடியது. வாடிக்கையாளர்கள் அவர்களின் தேவைக்கேற்ப பெட்ரோல் அல்லது சிஎன்ஜி என ஏதேனும் ஒன்றை நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக சிஎன்ஜி-இல் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களான ஆட்டோக்களை நாங்கள் அறிமுகம் செய்து வரலாறு படைத்தோம், அதனை அடுத்து சிஎன்ஜி அடிப்படையில் ஆன ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தோம், தற்போது சிஎன்சி அடிப்படையிலான இருசக்கர வாகனத்தை நாங்கள் அறிமுகம் செய்ய இருக்கிறோம் என பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது.
பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அது மட்டுமின்றி டிஸ்க் பிரேக்குகள் முன் பக்கத்திலும் பல்சர் என்எஸ் 125 இல் இருப்பது போன்ற அலாய் சக்கரங்களும் இதில் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.
125சிசி எஞ்சின் கொண்டதாக இந்த பைக் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோலுக்கு மாற்றாக வேறு எரிபொருளில் இயங்கும் வாகனங்களை மக்கள் நாடி வருகின்றனர். இதன் காரணமாகவே மின்சார வாகனங்களின் விற்பனை இந்தியாவில் அதிகமாகி இருக்கிறது.
ஆனாலும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றான ஒரு எரிபொருளில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனை புரிந்து கொண்ட பஜாஜ் நிறுவனம் பட்ஜெட் விலையில் சிஎன்ஜி பைக்குகளை தயாரித்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications