இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான பந்தன் வங்கியின் நிறுவனர், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்திர சேகர் கோஷ் தனது பதவியிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஜூலை 9, 2024 அன்று தனது பதவிக்காலம் முடிவடைந்தவுடன், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்று பந்தன் வங்கி, பங்குச்சந்தையில் அறிக்கையைத் தாக்கல் செய்து பொது மக்களுக்கும், தனது வங்கி பங்கு முதலீட்டாளர்களுக்கும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சந்திர சேகர் கோஷ் கூறுகையில் "பந்தன் வங்கி (Bandhan Bank) வளர்ச்சிக்காக பத்தாண்டுகள் சேவையாற்றியுள்ளேன். இதில் மூன்று பதவிக்காலங்கள் தொடர்ந்து நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தேன். தற்போது, பந்தன் குரூப் (Bandhan group) மட்டத்தில் பெரிய மூலோபாய பதவியை ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்கிறேன்" என்று சந்திர சேகர் கோஷ் இவ்வங்கியின் நிர்வாக குழுவிடம் சமர்ப்பித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது தற்போதைய பதவிக்காலம் முடிவடைவதோடு பந்தன் வங்கியின் சேவையிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். "எனது இந்த முடிவை நிர்வாக குழுவிடம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நிர்வாக குழுவின் ஆதரவு மற்றும் ஆலோசனைக்கு நன்றி." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி, ரிசர்வ் வங்கி, யுனிவர்சல் வங்கி அமைப்பதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை பந்தன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பந்தன் வங்கி 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி, 24 மாநிலங்களில் 501 கிளைகள் மற்றும் 50 ஏடிஎம்களுடன் தொடங்கப்பட்டது.
கிழக்கு இந்தியாவிலிருந்து யுனிவர்சல் வங்கியாக மாறிய முதல் மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனம் இதுவாகும். 2018 ஆம் ஆண்டு, பந்தன் வங்கி பங்குச் சந்தையில் வெற்றிகரமாகப் பட்டியலிடப்பட்டது.
இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு, வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்பதற்காக, மலிவு விலையில் வங்கி சேவைகளை வழங்க க்ருஹ் ஃபைனான்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தி தனது சேவையை விரிவாக்கம் செய்தது.
பந்தன் வங்கி பயணத்திலும், வளர்ச்சியிலும் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில், பந்தன் வங்கி ரூ.1.35 லட்சம் கோடி டெபாசிட்களை திரட்டியுள்ளது. 2024 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.1.28 லட்சம் கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு, கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான உதய் கோட்டாக் செப்டம்பர் 1 ஆம் தேதி பதவி விலகினார். இவர் வங்கியை சுமார் 20 வருடங்களுக்கும் அதிகமாக கோட்டாக் வங்கியை நிர்வாகம் செய்து வந்தார்.


Click it and Unblock the Notifications