பெங்களூரு: உலகிலேயே போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் முன்னணியில் இருக்கிறது பெங்களூரு நகரம். இங்கே போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் பெங்களூரு வாசிகளுக்கு நேரலையில் டிராபிக் அலர்ட்டுகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதன் மூலம் 15 லட்சம் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் பெங்களூருவில் எந்தெந்த பகுதியில் எல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்பது குறித்த முன்னெச்சரிக்கைகளை நேரலையாக பெற உள்ளனர்.

இதற்காக பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் மற்றும் பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்துக்கு உட்பட்ட 1300 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களில் குடியிருப்பவர்கள் டிராபிக் குறித்த அப்டேட்டுகளை பெறுவார்கள்.
இந்த முயற்சியின் மூலம் சுமார் 15 லட்சம் பேர் பயனடைவார்கள் என சொல்லப்படுகிறது. முன்கூட்டியே போக்குவரத்து நெரிசல் குறித்த எச்சரிக்கைகளை பெறுவதன் மூலம் அவர்களின் திட்ட பயணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.
பெங்களூரி போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் அனுஷத் இந்த புரிந்துணர்வு ஒப்பந்த மூலம் பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்திற்கு உட்பட்ட கட்டிடங்களில் குடியிருக்கும் நபர்களுக்கு நிகழ் நேர டிராபிக் அப்டேட்டுகளை வழங்குவர் என கூறியுள்ளார்.
இதற்காக பெங்களூரு போக்குவரத்து காவல் துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தெரிவித்தார். மேலும் சாலை போக்குவரத்து மற்றும் சாலை விதிகள் தொடர்பாக குடியிருப்பு வாசிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு அவர்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் தொலைவில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்பது குறித்த அப்டேட் அவர்களின் செல்போனுக்கே நேரடியாக சென்று விடும் என அனுஷத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் சிறந்த நேர மேலாண்மை, விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகிய மூன்றின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது மற்றும் அதற்கேற்ற வகையில் மக்கள் தங்களின் பயணங்களை திட்டமிட்டு கொள்வது என்பதை நோக்கமாகக் கொண்டே இப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் CONNECT MEMBER என்ற மொபைல் செயலி வாயிலாக மற்றும் இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் சேனல்கள் வாயிலாக குடியிருப்பு வாசிகளுக்கு போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்சரிக்கைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications