இந்தியா ஆயுத உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட சிறு துப்பாக்கி உற்பத்தி நிறுவனமான எஸ்.எஸ்.எஸ் டிஃபென்ஸ் (SSS Defence) இந்தியாவின் நட்பு நாட்டிற்கு ஸ்னைபர் துப்பாக்கி ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, எஸ்.எஸ்.எஸ் டிஃபென்ஸ் நிறுவனம், .338 லாபுவா மக்னம் (Lapua Magnum) தோட்டாக்களைப் பயன்படுத்தும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்ய உள்ளது. குறிப்பாக, 1500 மீட்டர் தொலைவுக்கு மேல் இருக்கும் இலக்குகளை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த சிறப்புமிக்க துப்பாக்கிகள், முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட உள்ளதால் இதை மேக் இன் இந்தியா வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி வீரர்கள் மத்தியில் மிகவும் மதிப்பு மிக்கவர் என்றால் ஸ்னைப்பர் துப்பாக்கி வீரர்கள் தான். இத்தகைய சிறப்பு மிக்க துப்பாக்கிகளை முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்படுவது இந்தியாவுக்கு பெரும் பலம். இந்தியாவில் இருக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் இந்திய ராணுவத்திற்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தி பிரிண்ட் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தியா முதல்முறையாக வெளிநாட்டுக்கு துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எஸ்.எஸ்.எஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ஏற்கனவே இந்த ஸ்னைபர் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்து முடித்து, பிற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகமும், எஸ்.எஸ்.எஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் விளக்கம் கொடுக்கவில்லை.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏற்கனவே பெங்களூருவில் உள்ள எஸ்.எஸ்.எஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தைப் பார்வையிட்டுள்ளனர், மேலும் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிகிறது.

உலகளவில் குறைந்தது 30 நாடுகள் .338 லாபுவா மக்னம் (Lapua Magnum) துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றன, மேலும் பல்வேறு வடிவமைப்புகளில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் இந்த தோட்டாக்களுக்கான துப்பாக்கிகளை தயாரிக்கின்றனர் என்பதால், இந்த இந்திய துப்பாக்கிகளுக்கு ஏற்றுமதி சந்தையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன.
எஸ்.எஸ்.எஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் இந்த சாதனை, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவின் போட்டித்திறனை இந்தியா நிரூபித்துள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளுடன் துப்பாக்கி ஏற்றுமதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியப் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்புத் துறைக்கும் பெரும் பலத்தை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications