லண்டன்: சமூக மற்றும் பொருளாதாரத்தில் வளம் கொண்ட உலக நகரங்கள் பட்டியலில் இந்திய நகரம் ஒன்று முதல் நூறு இடத்திற்குள் வந்து அசத்தியுள்ளது. அந்த நகரத்திற்கு இப்பட்டியலில் 83வது இடம் கிடைத்துள்ளது.
தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பை போன்றவை கூட நூறுக்கும் மேலாகவே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், 83வது இடத்தை பிடித்து அசத்திய அந்த நகரம் எது என தெரிய வேண்டுமா?
இதோ அந்த பட்டியல் குறித்த ஒரு சுவாரசிய தகவல் உங்களுக்காக. ஸ்பெயின் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது செழுமை மற்றும் அனைவருக்கமான சம பங்கு அடிப்படையிலான வளர்ச்சி குறித்த இந்த பட்டியல்.
பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை

சரிசம வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி மட்டுமே இதற்கு தரவாக எடுக்கப்படவில்லை. தரம் மற்றும், வளங்கள் அனைத்து மக்களுக்கும் சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் இந்த பட்டியல் கணக்கில் எடுத்துள்ளது. இப்பட்டியலில், முதலிடம் பிடித்துள்ள நாடு, சுவிச்சர்லாந்தின், சூரிச் நகரமாகும். கொடுத்து வைத்தவர்கள்தான் அந்த நகரவாசிகள்.

பெங்களூர் சிட்டி
இந்த பட்டியலில் 83வது இடத்தை பிடித்து அசத்தியுள்ள நகரம் தென்னிந்தியாவிலுள்ள பெங்களூர். அதேநேரம், டெல்லி 101வது இடத்திலும், மும்பை 107வது இடத்திலும்தான் உள்ளன. முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே இந்திய நகரம் என்ற பெருமையை, இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப் புகழப்படும், பெங்களூர் பெற்றுள்ளது.

புதிய அளவுகோல்
செழிப்பு மற்றும் அனைவருக்குமான இணைப்பு விருதுகள் (PICSA) குறியீடு என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. "வணிக ரீதியற்ற தரவரிசைக் குறியீடாக இது உள்ளது. பொருளாதாரத்தில் மக்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதையும், அதன் பங்களிப்புக்கு மக்களையும் சேர்த்து, ஒரு முழுமையான கணிப்பை வழங்கும் நோக்கத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிய பொருளாதார உற்பத்தித்திறனின் புதிய அளவை கணக்கில் எடுத்துள்ளோம் என்று திட்ட இயக்குனர் ஆசியர் அலியா காஸ்டனோஸ் தெரிவித்தார்.

வாழ்வு செழிப்பு
புதிய வழிகளில் வாழ்க்கை தரத்தை கணிக்க வேண்டியதன் அவசியத்தை, அரசு மற்றும் தனியார் துறைகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆரோக்கியம், வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைத் தரம் போன்ற காரணிகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. வேலைகள், திறன்கள் மற்றும் வருமானத்துடனான வாழ்க்கை செழிப்பை தாண்டி இதுவும் முக்கியம்" என்று அவர் கூறினார்.

வீட்டுவசதி, சுகாதாரத்துறை
அந்த வகையில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தவிர, வீட்டுவசதி மற்றும் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான வசதிகள் போன்ற காரணிகளை PICSA குறியீடு கணக்கெடுத்துள்ளது. அப்படி பார்த்தால், பெங்களூர் மற்ற இந்திய நகரங்களைவிடவும், முன்னிலையில் உள்ளது. உலகின் முக்கிய நகரங்களை பொருளாதாரத்தின் அளவால் மட்டுமல்ல, அதன் அனைத்து குடிமக்களுக்கும் உள்ளடக்கிய மற்றும் வளமான சூழல்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் அடிப்படையில் இந்த ரேங்க் பட்டியல் உருவாகியுள்ளது.

டாப் நகரங்கள்
சுவிட்சர்லாந்தின் சூரிச், இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளதற்கு காரணம், அனைத்து வகைகளிலும், குறிப்பாக வாழ்க்கைத் தரம், வேலை, வீட்டுவசதி, ஓய்வு, பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் இது டாப் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரிய தலைநகரான வியன்னா உள்ளது. சுகாதாரத்துறையில் அதிக மதிப்பெண்களுடன், சூரிச்சின் மிக அருகில் உள்ளது. கோபன்ஹேகன், லக்சம்பர்க் மற்றும் ஹெல்சின்கி ஆகியவை, முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள மற்ற நகரங்கள்.

ஆசியாவின் ஒரே நகரம் தைபே
இந்த பட்டியலின் டாப்பில் ஐரோப்பிய நகரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் 20 இடங்களில் 15 ஐரோப்பிய நகரங்கள். நான்கு வட அமெரிக்க நகரங்கள். கனடா நாட்டின் ஒட்டாவா 8 வது இடத்திலும், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி 11 வது இடத்திலும், சியாட்டில் 14 வது இடத்திலும், பாஸ்டன் 16 வது இடத்திலும் உள்ளன. ஆசிய நகரங்களில் டாப் 20க்குள் உள்ள ஒரே நகரம் தாய்வானின் தைபே. இது, 6 வது இடத்தை பிடித்து அசத்தியது.