எப்படா 1 தேதி வரும் சம்பளம் வரும் என காத்திருப்பவர்கள் முதல் லட்ச கணக்கில் டர்ன்ஓவர் செய்யும் முதலாளிகள் வரையில் தற்போது அதிமாக சிக்கும் மோசடி திட்டம் தான் இந்த யூடியூப் லைக் பிஸ்னஸ். வட இந்தியாவில் பல மாதங்களாக பல பேரிடம் லட்ச கணக்கில் திருடிய கூட்டம் தற்போது தென்னிந்தியா பக்கம் திரும்பியுள்ளது. மக்களே தப்பித்தவறி கூட மாட்டிக்காதீங்க.
பெங்களூரின் முக்கிய பகுதியான எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் 2 சலூன்களை வைத்து நடத்தி வரும் நளகனி குருராஜு என்பவர் சுமார் 52 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை இந்த மோசடியில் இழந்துள்ளார். இந்த பணத்தை எப்படியெல்லாம் இழந்துள்ளார் என்றால் மயக்கமே வரும்.

நளகனி குருராஜு-வுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்றும் அதுவும் இன்ஸ்டென்ட் முறையில் லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை காட்டியதால், இதை நம்பிய நளகனி குருராஜு வீட்டில் இருக்கும் தங்க நகைகளை அடமானம் வைத்தும், பிக்சட் டெபாசிட் தொகையை எடுத்தும், பிஸ்னஸ் வங்கி கணக்கில் ஓவர் டிராப்ட் தொகை எடுத்தும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் இந்த 52 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
எப்படி நடந்தது..?: நளகனி குருராஜு-வுக்கு +1(6292742279) என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. இதில் வீட்டில் இருந்துக்கொண்டே Part Time Job மூலம் யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்வது வாயிலாகவும்,லைக் செய்வது வாயிலாகவும் பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர்.
ஒவ்வொரு சேனல்-ஐ சப்ஸ்கிரைப் செய்வது வாயிலாக 50 ரூபாய் வீதிம் 3 சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தது மூலம் 150 ரூபாய் குருராஜு வங்கி கணக்கில் உடனடியாக டெபாசிட் செய்துள்ளனர். அடுத்த நிமிடமே இந்த மோசடியாளர்கள் ஒரு டெலிகிராம் குரூப்-ல் குருராஜு-வை சேர்த்துள்ளனர்.
இந்த குரூப்-ல் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளதாகவும், அவர்கள் கிரிப்டோ முதலீடு, கிரிப்டோ டாக்ஸ் குறித்து பேசியுள்ளனர். இந்த குரூப் அடிமின் பிட்காயின் வாங்கி விற்பது மூலம் வேகமாக சம்பாதிக்க முடியும் என கணக்கு காட்டியுள்ளார். இதேபோல் செய்ததாகவும், அதன் மூலம் லாபம் கிடைத்துள்ளதாகவும் குரூப்-ல் இருந்தவர்கள் பேமெண்ட் ஸ்கிரீன்ஷாட் பதிவு செய்துள்ளனர்.
இதே நேரத்தில் 5 வைச்சா 10, 10 வைச்சா 20 என்ற கணக்கில் 30,000 ரூபாய் செலுத்தினால் 43,500, 9,69,000 ரூபாய் செலுத்தினால் 13,08,150 ரூபாய் எனவும், 6,28,000 ரூபாய் செலுத்தினால் 9,10,600 ரூபாய் வித்டிரா செய்துள்ளனர்.
இதை நம்பி நளகனி குருராஜு bitFlyer போன்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளம் போன்ற ஒரு போலியான தளத்தில் பிட்காயினில் முதலீடு செய்ய கணக்கை திறந்துள்ளார். டெலிகிராம் குரூப்-ல் போட்ட ஸ்கிரீன்ஷாட்-ஐ நம்பி குரூப் அட்மின் கூறியதை போலவே BTC brokers என்று கூறிவிட்டு 7 வெவ்வெறு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.
இப்படி நளகனி குருராஜு பல முறை செய்யப்பட்ட முதலீடுகளின் மதிப்பு மொத்தம் 52 லட்சம் ரூபாய், இது அவருடைய போலி பிட்காயின் கணக்கில் அப்டேட் ஆகியுள்ளது. இந்த முதலீட்டு பணம் சில நாட்களிலேயே 65 லட்சமாக மாறியுள்ளது, இதை வித்டிரா செய்யலாம் என்றால் அந்த கணக்கில் அப்படியொரு ஆப்ஷனே இல்லை.
இதுகுறித்து டெலிகிராம் குரூப்-ல் கேட்டுள்ளார், பணத்தை வித்டிடரா செய்ய வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார், இதை குரூப்-ன் பிற நபர்களும் உறுதி செய்த நிலையில். டெலிகிராம் குரூப் அட்மின்-யிடம் தனியார் பிரைவேட் சேட் மூலம் கேட்கப்பட்ட போது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆம், இது மோசடி திட்டம் தான் எனவும், 3 லட்சம் கொடுத்தால் பார்ட்னராக சேர்ந்துக்கொண்டு பணத்தை இதேபோன்ற முறையில் திரும்ப பெறலாம் எனவும் இவர்களுக்கு மும்பையில் அலுவலகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நளகனி குருராஜு பணத்தை இவர்களிடம் இருந்து பெற முடியாது என தெரிந்ததும், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது நளகனி குருராஜு திவாலாகி, தனது ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் உள்ளார். இவர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் டெல்லி, ஆந்திர பிரதேசம், ஒடிஷா ஆகிய பகுதிகளில் உள்ளது.


Click it and Unblock the Notifications