கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் வீடு வாடகைகளின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரை கொம்பாக இருப்பதாக தொடர்ச்சியாக பல்வேறு இளைஞர்களும் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக முதன்முறையாக ஒரு வேலைக்கு செல்லக்கூடிய நபர் என்றால் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது என்பது சாத்தியமே இல்லை என்ற சூழல் உண்டாகி இருக்கிறது.
பெங்களூருவில் வீடு தேடி வரக்கூடிய பலரும் வீட்டு உரிமையாளர்கள் பல ஆயிரம் ரூபாயை வாடகையாக கேட்கிறார்கள், பல லட்சங்களை டெபாசிட் தொகையாக கேட்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிடுவதை காண முடிகிறது. அந்த வகையில் மலிவு விலை வாடகை வீட்டுக்கான நகரமாக இனி பெங்களூரு இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் எக்ஸ் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.

ராஜிவ் என்ற பெண் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பெங்களூருவில் வாடகைக்கு வீடு தேடுபவர்களின் நிலைமை மோசமாகிவிட்டது எனக் கூறியிருக்கிறார். மும்பையோடு பெங்களூரு போட்டி போட தொடங்கிவிட்டது என கூறி இருக்கும் அவர் இரண்டு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாயை வாடகையாக கேட்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். கிழக்கு பெங்களூருவின் கடுபீஷனஹல்லி பகுதியில் வீடு தேடி வருவதாக குறிப்பிட்டு இருக்கும் 24 வயதான மென்பொருள் பொறியாளரான ராஜிவ், வீட்டு வாடகையை கேட்டு தான் ஆடிப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு படுக்கை அறை கொண்ட செமி ஃபர்னிஸ்டு வீட்டிற்கு 70 ஆயிரம் ரூபாயை வாடகையாக கேட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவில் பலரும் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டுக்கு 70 ஆயிரம் ரூபாய் வாடகையா என ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.
சிலர் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவு செய்திருக்கின்றனர். பெங்களூருவைப் பொறுத்தவரை ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்றால் கண்டிப்பாக இவ்வளவு வாடகை தான் வசூல் செய்கிறார்கள் என கூறி இருக்கிறார்கள். செமி ஃபர்னிஸ்டு வீட்டிற்கு 70 ஆயிரம் வாடகை என்றால் ஃபுல்லி ஃபர்னிஸ்டு வீடாக இருந்தால் எவ்வளவு கேட்பார்கள் என பதிவு செய்திருக்கிறார் ஒரு பயனர். பலரும் கிழக்கு பெங்களூரு பகுதியில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என பதிவு செய்து இருக்கின்றனர்.
பெங்களூரு வீட்டு உரிமையாளர்களின் பேராசைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என ஒரு நபர் பதிவு செய்திருக்கிறார். மற்றொரு நபர் வாடகை 70 ஆயிரம் எப்படி இருந்தாலும் பதினொரு மாத வாடகை டெபாசிட் ஆக கேட்பார்கள் இவர்களிடம் டெபாசிட் கொடுப்பதற்கு பதிலாக அந்த பணத்தை வங்கியில் போட்டு வட்டி வாங்கிக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications