டெல்லி: இந்தியாவில் ஸ்டார்ட் அப் தலைநகரம் என அழைக்கப்படுகிறது பெங்களூரு. இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பெங்களூருவில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இதனிடையே இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த நகரம் எது என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த வாரம் ஸோமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல் தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் தங்களுடைய நிறுவனங்களை தொடங்குவதற்காக பெங்களூருக்கு தான் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை எனக் கூறியிருந்தார்.

எக்னாமிக் டைம்ஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தீபிந்தர் கோயல் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் பெங்களூருக்கு செல்லவில்லை என்றார். பொதுவாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணுபவர்கள் பெங்களூருக்கு செல்ல வேண்டும் அங்குதான் அதற்கு உகந்த சூழல் இருக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையில் நிலைமை அப்படி கிடையாது தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அதனை செய்ய முடியும் எனக்கூறி இருந்தார்.
கோயலின் கருத்துக்கு ஆதரவு தரும் வகையில் பேசியுள்ள பாம்பே சேவிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாந்தனு தேஷ்பாண்டே தொழில் தொடங்குவதற்கு பெங்களூருவை விட 1000 சதவீதம் சிறந்த நகரம் டெல்லி என கூறியுள்ளார். யூடியூப் பக்கத்திற்கு பேட்டி அளித்துள்ள சாந்தனு தேஷ்பாண்டே தற்போதைய சூழல்களை பார்க்கும்போது பெங்களூருடன் ஒப்பிட்டால் தொழில் தொடங்குவதற்கு உகந்த நகரம் டெல்லி தான் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
பெங்களூரு நிச்சயமாக இந்தியாவின் சிலிக்கான் வேலி என்பதை மறுப்பதற்கு கிடையாது. டெல்லியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில்கள் எல்லாம் உருவாகும் ஒரு நகரமாக பெங்களூரு தான் இருக்கிறது , ஆனால் ஒரு சிறிய அளவிலான தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் கூட பெங்களூருக்கு தான் செல்ல வேண்டும் என்ற மனநிலை தான் மாற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பெங்களூருவை விட தரமான தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்பு டெல்லியில் அதிகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
புதிதாக வேலைக்கு வருபவர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரமாக வேலை செய்ய வேண்டும் என கூறி கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிக்கொண்டவர் தான் சாந்தனு தேஷ்பாண்டே. இவர் தன்னுடைய நிறுவனத்தை டெல்லியில் தொடங்கிய போது திறமையான பணியாளர்கள் தாராளமாக கிடைத்தனர் என்றும் ஸோமேட்டோ, பேடிஎம், ஸ்னாப் டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் டெல்லியில் தான் செயல்பட்டன என்றும் தெரிவித்ள்ளார்.
டெல்லியில் தொழிற்சார்ந்த கலாச்சாரம் வலுவாக இருக்கிறது ஆனால் பெங்களூரில் சேவை சார்ந்த தொழில்களின் கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications