கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி பவர் நிறுவனம் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்து வங்க தேசத்திற்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் குறைந்த விலைக்கு அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்க அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச அரசு தற்போது மின்சாரத்திற்கான மானிய தொகைக்கு அதிகப்படியான தொகை செலவிடுகிறது. இது அந்நாட்டு பட்ஜெட்டில் மிகப்பெரிய செலவினமாக மாறி இருக்கிறதாம். எனவே வங்கதேச அரசு தங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்யக்கூடிய அதானி குழுமத்தோடு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது தங்களுக்கு கிடைக்கும் விலையை விட குறைந்த விலைக்கு மின்சாரத்தை வழங்கும்படி பேச்சு வார்த்தையில் கோரிக்கை விடுக்கப்பட இருக்கிறதாம்.

அதானி குழுமம் தற்போது வங்கதேச அரசுக்கு ஒரு யூனிட் மின்சாரம் 14.05 டாக்கா என விற்பனை செய்கிறது இது இந்திய ரூபாய் மதிப்பில் 9 ரூபாய் 95 காசுகள் ஆகும். இதுவே 2022 -23 ஆம் ஆண்டு 8.77 டாக்கா என இருந்தது இந்திய ரூபாய் மதிப்பில் 6 ரூபாய் 22 காசுகள் ஆகும், இது 2023 - 24 ஆம் நிதி ஆண்டில் 12 டாக்கா அதாவது 8 ரூபாய் 51 காசுகள் என உயர்த்தப்பட்டது. இது தற்போது 14 டாக்கா என அதிகரிக்கப்பட்டுள்ளது . இதனால் வங்கதேச அரசு மின்சாரத்திற்கான மானிய தொகையாக மட்டும் 320 பில்லியன் டாக்காவை பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நிலையில் மின்சாரத்துக்காக இவ்வளவு தொகையை செலவிடுவது குறித்து தயக்கம் தெரிவித்து வருகிறது அந்நாட்டு அரசு. இது ஒரு புறம் இருக்க அதானி பவர் நிறுவனத்தோடு வங்கதேச அரசு 2017 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதன்படி அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு அதானி குழுமம் தங்கள் நாட்டிற்கு மின்சாரம் தயாரித்து வழங்கும், குறிப்பாக நிலக்கரியில் தயாரித்த மின்சாரத்தை வழங்குவது என இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததை எடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் வங்கதேச அரசு குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்கும்படி கேட்க உள்ளதாம். ஏற்கனவே வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அதானி குழுமம் அந்நாட்டுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை பாதியாக குறைத்து விட்டது.


Click it and Unblock the Notifications