ராஜா கைய வச்சா அது ராங்கா போயிடுமா என்பது போல் கடந்த ஒரு மாதமாக பங்களாதேஷ் அரசுக்கும், இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி-க்கு சொந்தமான அதானி பவர் நிறுவனத்திற்கும் மத்தியில் காரசாரமான விவாதம் நடந்து வந்த நிலையில், வேறு வழியே இல்லாமல் பங்களாதேஷ் அரசு தற்போது வழிக்கு வந்துள்ளது.
அதானி பவர் நிறுவனம் பங்களாதேஷ் நாட்டிற்கு மின்சாரம் வழங்கும் முக்கியமான நிறுவனமாகும். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா மின் நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்கு சுமார் 1,600 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக வெளிநாட்டுக்கு மின்சாரம் விற்பனை செய்யும் ஒப்பந்தம் இது.

இந்நிலையில், பங்களாதேஷ் மின் வளர்ச்சி வாரியம் (BPDB) க்கு அதானி பவர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை 843 மில்லியன் டாலருக்கு (7000 கோடி ரூபாய்) அதிகமாகியுள்ளது. இந்த நிலுவை தொகையைச் செலுத்தா காரணத்தால், அதானி பவர் தனது மின்சார விநியோகத்தை பாதியாக குறைத்து, இதுமட்டும் இல்லாமல் அடுத்த சில நாட்களுக்குள் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக, பங்களாதேஷ் மின் வளர்ச்சி வாரியம் 173 மில்லியன் டாலர் (1450 கோடி ரூபாய்) மதிப்பிலான புதிய கடன் கடிதத்தை (LC - Line of Credit) அதானி பவருக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், அதானி பவர் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. ஆனால் தற்போது அளிக்கப்படும் 800 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே விநியோகிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
அதானி பவர், பங்களாதேஷ் மின் வளர்ச்சி வாரியத்திடம் கூடுதலாக 15-20 மில்லியன் டாலர் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தொகை கொடுத்தால் தான் இல்லையெனில், கோடா மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது அதானி பவர்.
பொருளாதார சிக்கலில் இருக்கும் பங்களாதேஷ் நாட்டிற்கு அதானி பவர் மூலம் கிடைக்கும் மின்சாரம் கட்டாயம் அவசியம். இப்படியிருக்கும் போது தான் புதிதாக பங்களாதேஷ் நாட்டில் உருவான அரசு, முந்தைய அரசு அதானி குழுமத்துடன் செய்த ஒப்பந்தம் மிகவும் காஸ்ட்லியாக உள்ளது என்று அறிவித்து, இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதாக அறிவித்தது.
இதேவேளையில் அதானி பவர்-க்கு செலுத்த வேண்டிய தொகையை நிறுத்தி வைத்ததன் விளைவாக அதானி பவர் மின்சார விநியோகத்தை பாதியாக குறைத்தது.


Click it and Unblock the Notifications