இந்தியாவின் சிலிக்கான் வேலி என பெருமையுடன் அழைக்கப்படும் பெங்களூரில் பணியாற்றுபவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்தும், மென்பொருள் நிறுவனங்களில் இருந்தும் 24 லேப்டாப்களை திருடிய பெண் கைது செய்யப்பட்டு உள்ளது பிஜி-வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவைச் சேர்ந்த 26 வயதான பி.டெக் பட்டதாரி பெண்ணை பெங்களூர் HAL காவல்துறை கைது செய்துள்ளது. பெங்களூரில் ஒரு தங்கும் விடுதி-யில் (PG) வசிப்பவரின் புகாரின் அடிப்படையில் HAL போலீசார் விசாரணை செய்ததில் இப்பெண் சிக்கியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களைப் பயன்படுத்தி குற்றவாளி ஜஸ்ஸி அகர்வால் என்பவரை HAL காவல்துறை கண்காணித்துக் கண்டுபிடித்தனர். நொய்டாவைச் சேர்ந்த 26 வயதான ஜஸ்ஸி அகர்வால் கடந்த மார்ச் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணையில், ஜஸ்ஸி பி.டெக் பட்டதாரி என்பதும், தனியார் வங்கியில் சிறிது காலம் பணிபுரிந்த பின்னர், தங்கும் விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்ததும் தெரியவந்தது. விடுதியில் இருப்பவர்கள் சாப்பிட செல்லும்போதோ அல்லது டீ பிரேக்கிற்கு வெளியே செல்லும் போதோ யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அவர்களின் அறைகளுக்குள் நுழைந்து அவர்களின் லேப்டாப் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை திருடுவது அவரது வழக்கமாக இருந்தது.

திருடப்பட்ட பொருட்களை ஜஸ்ஸி அகர்வால் தனது சொந்த ஊரில் உள்ள கள்ள சந்தையில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
ஊருக்கு சென்று பெங்களூருக்கு திரும்பியதும், வேறு ஒரு தங்கும் விடுதியில் தங்கி மீண்டும் திருட்டில் ஈடுபடுவது அவரது செயல்பாடாக இருந்தது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது வேலையை விட்டுவிட்டு விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்களைத் திருடுவதிலேயே கவனம் செலுத்தி வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications