விடிந்தால் புத்தாண்டு, மொத்த உலகமும் 2026ஐ வரவேற்க தயாராகியிருக்கும் வேளையில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய ஆண்டு துவக்கத்தில் பலருக்கும் வங்கி பணிகள், பண பரிமாற்றம், புதிய முதலீட்டுக்கான திட்டமிடல் இருக்கும் வேளையில் வங்கி திறந்திருக்குமா என்பது குறித்த தெளிவு தேவை.
டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் முழு நேரம் செயல்படும் என்றாலும் சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனால் கடைசி நேர சிக்கலை தவிர்க்க, முக்கிய நிதி பரிவர்த்தனைகளை இன்றே முடித்துக்கொள்ளவும்.

டிசம்பர் 31, 2025 அன்று, புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் Imoinu Iratpa பண்டிகையை முன்னிட்டு, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள வங்கிகள் டிசம்பர் 31ஆம் தேதியன்று வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதிச் சேவைகள் தடையின்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.
ஜனவரி 1, 2026 அன்று புத்தாண்டு தினம் மற்றும் Gaan-Ngai பண்டிகைக்காக மிசோரம், தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேற்கு வங்கம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களைத் தவிர்த்து, பிற மாநிலங்களில் உள்ள வங்கிகள் புத்தாண்டு தினத்தன்று வழக்கமான சேவைகளை வழங்கும்.
இதன் மூலம் ஜனவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் வங்கிகள் விடுமுறை.
வங்கிகள் விடுமுறை என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் நிறுத்திவைக்க வேண்டியதில்லை. ஆன்லைன் வங்கி சேவைகள், மொபைல் பேங்கிங் செயலிகள், UPI மற்றும் ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்தி நிதிப் பரிமாற்றங்கள், கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்ட வழக்கமான பரிவர்த்தனைகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம்.
ஆனால், பெரிய அளவிலான ரொக்கப் பணம் செலுத்துதல், காசோலை பரிமாற்றம் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் போன்ற நேரடி வங்கிச் சேவைகள் இந்த விடுமுறை நாட்களில் கிடைக்காது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கித் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு இன்றே திட்டமிட்டு முடித்திக்கொள்ளுங்கள். இல்லையெனில் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications