இந்தியாவின் இரண்டு முக்கிய பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆப் பரோடா (BOB) ஆகிய வங்கிகள் தங்களுடைய MCLR விகிதத்தை அதிகரித்துள்ளன. அதேபோன்று HDFC பேங்க் மற்றும் யெஸ் பேங்க் போன்ற தனியார் துறை கடன் வழங்குபவர்களும் தங்களுடைய MCLR விகிதங்களை அதிகரித்துள்ளன. அதிகமான வங்கிகள் தற்போது இந்த விகிதத்தை அதிகரிப்பதன் காரணமாக கடன் வாங்குபவர்களுக்கு EMI தொகை உயரக்கூடும். MCLR விகிதம் என்றால் என்ன? அவை பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற விவரங்கள் குறித்து விவரிக்கிறது இந்தப் பதிவு.
SBI பல்வேறு கால கட்டங்களுக்கான கடன்களுக்கு MCLR விகிதத்தை 5-10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கியும் 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

MLCR (Marginal Cost of Funds Based Lending Rates) என்றால் என்ன?: MLCR என்பது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான லெண்டிங் ரேட் என்று கூறுவர். இது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட விகிதமாகும்.
இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன்கள் ஆனாலும் சரி அல்லது புதிய கடன்கள் ஆனாலும் சரி, வட்டி விகிதங்கள் இருக்கும். MLCR விகிதம் அதிகரிக்கும் போது கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கலாம். MLCR விகிதம் குறையும் போது கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால், MCLR என்பது வங்கிகள் கடன் வழங்கும்போது வழங்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். வங்கிகள் இதற்கும் குறைவான வட்டிக்கு கடன் தர முடியாது. ஆனால், இதை விட அதிக வட்டி விதிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம்: இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதத்தில் மாற்றாமல் வைத்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது நாம் எப்படி நமக்குத் தேவைப்படும் நேரத்தில் வங்கிகளிடம் கடன் வாங்குகிறோமோ? அதே போல வங்கிகளும் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும் அதற்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது.
தற்போது பலருக்கும் எழும் கேள்வி என்னவென்றால்.. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும் போது எப்படி MCLR விகிதம் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது என்று. மேலே கூறியபடி MCLR விகிதம் என்பது வங்கிகள் கடன்களுக்கு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச வட்டி ஆகும். இந்த விகிதம் உயர்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வங்கியின் இயக்க செலவுகள் மற்றும் இதர செலவுகளை உள்ளடக்கி இந்த MCLR விகிதம் மாறுபடும்.
MCLR அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்க கடன் வாங்குபவரின் உத்தி என்னவாக இருக்க வேண்டும்?: முதலாவதாக, கடன் வழங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்தி Repo Linked Loan Rate (RLLR)-க்கு மாறலாம். அதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் ரெப்போ விகிதம் நிலையானதாகவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளதால், RLLR-க்கு மாறுவது நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், MCLR-களை விட RLLR-கள் மிகவும் வெளிப்படையானவை.
MCLR விகிதங்களில் வங்கிகள் சில கூடுதல் கட்டணங்களையும் சேர்த்துக் கொள்கின்றன. எனவே RLLR-களுக்கு மாறுவது பொதுவாக ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்தே அமையும்.
வங்கி கடன் வட்டி விகிதங்கள் உயரும் சூழலில், கடன் வாங்குபவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். MCLR-இல் இருந்து RLLR-க்கு மாறுவது மற்றும் கடன் வழங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்தி EMI தொகையில் மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து கடன் சுமையை குறைக்க முயற்சி செய்யலாம்.


Click it and Unblock the Notifications