இந்தியாவில் தங்கக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக தங்கத்தை வாங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா? அதன் லிக்குவிடிட்டி தான். இதை எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றலாம். தங்க கடன் பெறும்போது நகைக்கடைக்காரர் உங்களுடைய தங்கத்தை அடமானமாக பெற்றுக் கொள்வார். அப்படி வாங்கப்படும் நகைகளுக்கு அந்த கடைக்காரரே முழு பொறுப்பு. நீங்கள் வங்கியில் அடகு வைத்தாலும் அதை மீட்கும் வரை பாதுகாப்பது வங்கியின் பொறுப்பாகும். அடகு வைத்த தங்கம் திருடப்பட்டால் என்ன நடக்கும்? இதற்கு இழப்பீடு கிடைக்குமா?
எல்லா கடைக்காராலும் அடகு பிடிக்க முடியாது. அதற்கு பதிவு பெற்ற நிதி நிறுவனமாக இருக்க வேண்டும். அப்படி உள்ள நிறுவனங்களுக்கு மட்டும்தான் அடமானமாக தங்கத்தை பெற அனுமதி உண்டு. இது போன்ற நிறுவனங்கள் கண்டிப்பாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ வலியுறுத்துகிறது.
நகைகளை பத்திரமாக பாதுகாப்பது கடன் வழங்குபவரின் கடமை: நீங்கள் தங்க கடன் பெறும்போது நகையை அடகு வைத்தால் அந்த நகை வங்கிக்கு சொந்தம் ஆகிவிடாது. அடகு வைத்த நகைகளை நீங்கள் மீட்கும் வரை வங்கி பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதற்கு இன்ஷூரன்ஸ் செய்வதற்கும் ரிசர்வ் வங்கி முறையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனவே நகை காணாமல் போனால் ஒரு வாடிக்கையாளராக என்ன நடந்தது?, இதை எப்படி வங்கிகள் கையாளப் போகிறது? என்ற விபரங்களை வாடிக்கையாளர்கள் தாராளமாக கேட்கலாம்.
ரசீதை பத்திரமாக வைத்திருங்கள்: நீங்கள் நகையை பிணயமாக வைத்து கடன் பெற்றிருக்கிறீர்கள் என்பதற்கு முக்கிய ஆவணமாக இருப்பதே ரசீது தான். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இதுவே முக்கியமான சான்றாக இருக்கும். அதில் அடகு வைக்கப்பட்ட நகைகளின் விவரங்கள், எடை மற்றும் தூய்மை என அனைத்தும் தெள்ளத் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும். இதைத்தான் ரிசர்வ் வங்கியும் வலியுறுத்துகிறது. எனவே நகையை அடமானம் வைக்கும் போது அசல் ரசீதை பத்திரமாக வைத்திருங்கள்.
இழப்பீடு எவ்வளவு கிடைக்கும்?: நகையை பாதுகாக்கும் முழு பொறுப்பு வங்கிக்கு உள்ளது என்பதற்காக திருட்டு நடந்து விட்டால் அதற்கு அதிகமான இழப்பீடு கிடைக்கும் என்று அர்த்தம் அல்ல. எப்படி திருட்டு நடந்தது, வங்கியின் ஒப்பந்த விதிகள் என்ன?, காப்பீடு எவ்வளவு? என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இழப்பீடு நிர்ணயிக்கப்படும். எனவே நிலுவையில் உள்ள கடன் தொகை தான் நகையின் அதிகபட்ச மதிப்பு என்றோ அல்லது வங்கி கடனைத் தள்ளுபடி செய்து விடும் என்றோ நினைக்க வேண்டாம்.

திருட்டு குறித்து உடனடியாக தெரிவியுங்கள்: அடமானம் வைத்த தங்க நகை திருடப்பட்டு விட்டது என்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்ததும், உங்களுடைய நகையும் அதில் இருக்கிறது என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள். இதை வைத்தே எஃப்ஐஆர் பதிவு செய்யலாம். அதே போல உங்களுக்கும் வங்கிக்கும், உடனான அனைத்து தொடர்புகளையும் ஆவணமாக வைத்திருங்கள்.
வங்கி உதவு மறுத்தால் என்ன செய்வது? முதலில் வங்கியின் குறைதீர்ப்பு மையத்தில் புகார் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு கிடைத்தால் சரி... அப்படி எதுவும் வங்கியின் தரப்பில் செய்யப்படவில்லை என்றால் உரிய ஆவணங்களுடன் காவல் துறையில் புகார் செய்து எஃப்ஐஆர் பதிவின் நகல் மற்றும் பிற ஆவணங்களுடன் ரிசர்வ் வங்கியின் குறைதீர்ப்பாணயத்தை அணுகலாம்.


Click it and Unblock the Notifications
