நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் கனரா பேங்க் ஆகியவை தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இந்த நடவடிக்கை 2025-ஆம் ஆண்டின் மே மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த அறிவிப்பு கடன் வாங்கிய பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தியாக அமைந்திருக்கிறது.
ஏனெனில் இது போன்ற பொதுத்துறை வங்கிகள் வீட்டுக் கடன், தனிநபர் கடன் மற்றும் வாகனக் கடன்கள் போன்ற ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களைக் கொண்ட கடன்களுக்கு வங்கிகளால் பயன்படுத்தப்படும் MCLR விகிதத்தைக் குறைத்துள்ளது. MCLR விகிதம் சுமார் 5 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்துள்ளன.

MCLR என்றால் என்ன?: MCLR என்பது வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் வாகன கடன்கள் போன்ற கடன்களுக்கு வங்கிகளால் நிர்ணயிக்கப்படும் ஒரு அளவுகோல் ஆகும். MCLR விகிதம் குறைந்தால் மாதாந்திர ஈஎம்ஐ தொகையும் குறையும். அதோடு கடன் பெற்றவர்களுக்கு வட்டிச் சுமையும் வெகுவாகக் குறையும். இது நீண்ட காலத்திற்கு கடன் பெற்றவர்களுக்கு பயனளிக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா: பேங்க் ஆஃப் பரோடா தனது ஒரு வருட MCLR விகிதத்தை, மே மாதத்தில் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. மற்ற கால அளவுகளுக்கான வட்டி விகிதங்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்ததைப் போலவே தொடர்கின்றன. புதிய விகிதங்கள் மே 12, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஓவர்நைட் கடன்களுக்கான MCLR விகிதம் 8.15 சதவீதமாகவும், 1 மாதம் MCLR விகிதம் 8.35 சதவீதமாகவும், 3 மாத MCLR விகிதம் 8.5 சதவீதமாகவும், 6 மாத MCLR விகிதம் 8.80 சதவீதமாகவும், 1 வருட MCLR விகிதம் 8.95 சதவீதமாகவும் உள்ளது.
கனரா பேங்க்: கனரா பேங்க் தனது ஓவர்நைட் கடன்களுக்கான MCLR விகிதத்தை 8.30 சதவீதத்திலிருந்து 8.20 சதவீதமாகவும், 1 மாத கடன்களுக்கான MCLR விகிதத்தை 8.35 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகவும் குறைத்துள்ளது. 3 மாத கடன்களுக்கான MCLR விகிதம் தற்போது 8.55 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாகவும், 6 மாத கடன்களுக்கான MCLR விகிதம் 8.9 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
1 வருட கடன்களுக்கான MCLR விகிதம் 9.10 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல 2 மற்றும் 3 வருட கடன்களுக்கான MCLR விகிதங்கள் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 9.15 சதவீதம் மற்றும் 9.20 சதவீதமாக உள்ளன. இந்த புதிய வட்டி விகிதங்கள் 2025-ஆம் ஆண்டின் மே 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க், அதன் ஓவர்நைட் கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தை 8.40 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகவும், 1 மாத கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தை 8.50 சதவீதத்திலிருந்து 8.40 சதவீதமாகவும் குறைத்துள்ளது. 3 மாத கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் இப்போது 8.70 சதவீதத்திலிருந்து 8.60 சதவீதமாகவும், 6 மாத கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 8.90 சதவீதத்திலிருந்து 8.80 சதவீதமாகவும், 1 வருட எம்சிஎல்ஆர் விகிதம் 9.05 சதவீதத்திலிருந்து 8.95 சதவீதமாகவும், 3 ஆண்டு கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 9.35 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதமாகவும் உள்ளது. எம்சிஎல்ஆர் விகிதம் குறைக்கப்பட்ட காரணத்தினால் வட்டி விகிதமும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications