இந்தியாவின் முன்னணி வங்கிகள் பலவும் வைப்பு நிதி மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கி வந்த வட்டி விகிதங்களை குறைத்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா நிலையான வைப்பு தொகை திட்டங்களான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கி வந்த வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருவதாக பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா தங்களுடைய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் வழங்கி வந்த வட்டி விகிதங்களில் 0.25 சதவீதத்தை குறைத்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பேங்க் ஆப் இந்தியா இது நாள் வரை வழங்கி வந்த 400 நாட்களுக்கான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா எஃப்டி திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக 400 நாட்களுக்கான சிறப்பு எஃப்டி திட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தையே நிறுத்திக் கொள்வதாக பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. அது மட்டும் இன்றி பல்வேறு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கி வந்த வட்டி விகிதங்களையும் வட்டியையும் குறைத்து இருக்கிறது. மூன்று கோடி ரூபாய்க்கும் கீழ் செய்யப்படும் ஃபிக்சட் டெபாசிட்டுகளில் இந்த மாற்றங்கள் அமலாகின்றன.
இதன்படி 91 நாட்களில் இருந்து 179 நாட்களுக்குள் முதிர்வு பெறும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4.50 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 180 நாட்களில் இருந்து ஓராண்டுக்குள் கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 6.00 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டுக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 7 சதவீதத்திலிருந்து 6.80 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஓராண்டுக்கும் மேல் இரண்டு ஆண்டுகளுக்குள் இருக்கும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 6.80 சதவீதிலிருந்து 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மிக மூத்த குடிமக்களின் பெயரில் செய்யப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதத்தில் 0.65 சதவீதம் சேர்க்கப்பட்டிருக்கிறது, அதேபோல மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி தொகையில் 0.50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆறு மாதங்களுக்கு மேல் கால அளவு கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களில் 0.25 சதவீதத்தை குறைத்து 6 சதவீதமாக்கியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகள் வைப்பு தொகை திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications