வங்கி சேமிப்பு என்று சொன்னவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் தான். அது என்னவோ வங்கிகள் பிற திட்டங்களை வழங்கினாலும் தலைமுறை தலைமுறையாக இந்த ஒரு திட்டத்தில் மட்டும் முதலீடு செய்யும் குடும்பங்கள் ஏராளம். இதைப் புரிந்து கொண்டு வங்கிகளும் அவ்வப்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கும். அந்த வரிசையில் முன்னணி பொதுத்துறை வங்கியாக இருக்கும் பேங்க் ஆஃப் இந்தியாவும் வட்டி விகிதத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.
மே 18-ஆம் தேதி முதல் இந்த புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. சுமார் ரூ.3 கோடிக்கும் கீழ் செய்யப்படும் டெபாசிட்களுக்கு இந்த வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி எவ்வளவு?: பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இருந்து, அங்கு டெபாசிட் செய்ய திட்டமிட்டிருந்தால் வங்கி வழங்கவிருக்கும் புதிய வட்டி விகிதங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். 1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 6.5% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும் திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் 6.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம். அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால் தற்போது வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக கிடைக்கும். 80 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு 65 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி கிடைக்கும். இது மூன்று ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும்.
அதுவே மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் செய்யப்படும் டெபாசிட்டுக்கு மூத்த குடிமக்களாக இருந்தால் 75 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி கிடைக்கும். 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட 90 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி வழங்கப்படவுள்ளது.
அதேபோல ரூ.1 கோடிக்கு மேல், 1 ஆண்டு கால அளவைத் தேர்ந்தெடுத்து "நான் காலபில்" டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதலாக 0.15 சதவீத வட்டி கிடைக்கும். நான் காலபில் என்றால் குறிப்பிட்ட காலத்திற்கு முன் பணத்தை எடுக்க முடியாத டெபாசிட். இதற்கு லோன் வசதியும் கிடையாது.
எனவே வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்வதற்கு வங்கி கிளைகளை அணுகலாம் அல்லது நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் ஆகிவற்றின் மூலமாகவும் டெபாசிட் செய்யலாம். சேமிப்பு என்பது நமக்கு ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஆகச்சிறந்த பரிசு. எனவே வங்கிகள் வழங்கும் வட்டி உயர்வைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பணத்தை அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications