2026-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியில் வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் இயங்காது. மேலும் வாடிக்கையாளர்கள் 3 நாட்களுக்கு எந்த சேவையும் பெற முடியாது. எந்த தேதியில் இருந்து இந்த வேலை நிறுத்தம் கடைபிடிக்கப்பட உள்ளது?, எந்தெந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியாது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
வேலை நிறுத்தம் எப்போது?: யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தொடர்ந்து 3 நாட்கள் வங்கி சேவைகளைப் பெற முடியாது. வேலைநிறுத்த போராட்டமும் வார விடுமுறை நாட்களும் ஒன்றாக வருவதால் 5 நாட்களுக்கு வங்கி சேவை பெறுவதில் பிரச்சனை ஏற்படும் அபாயம் எழுந்தது.

இதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வருகின்ற செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை. அன்று மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தான்.
ஆனால் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் செப்டம்பர் 27-ஆம் தேதி வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
எந்தெந்த தேதியில் வங்கி கிளைகள் செயல்படாது?:
செப்டம்பர் 26 சனிக்கிழமை: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை
செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை: வங்கிகள் செயல்படும்
செப்டம்பர் 28 திங்கட்கிழமை: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
செப்டம்பர் 29 செவ்வாய்க்கிழமை : வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
செப்டம்பர் 30 புதன்கிழமை: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
இந்த முறை வேலை நிறுத்தத்திற்காக தேர்வு செய்யப்பட்ட தேதியில்தான் பிரச்சனை. ஏனெனில் செப்டம்பர் 30-ஆம் தேதியில் வங்கிகளுக்கு அரையாண்டு கணக்கு முடிக்க வேண்டிய வேலைகள் மீதமிருக்கும். இதனால் 5 நாட்கள் முடிந்து வந்த பிறகு ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று வங்கிகள் செயல்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 26-ஆம் தேதி சனிக்கிழமை அன்று விடுமுறை. 27-ஆம் தேதி வங்கிகள் செயல்படும். பிறகு மீண்டும் 3 நாட்கள் அதாவது செப்டம்பர் 28 தொடங்கி செப்டம்பர் 30 வரை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திறந்திருக்குமா?: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு முன்பே எல்லா பரிவர்த்தனையும் முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தின் போது ஒரு சில வங்கி சேவைகளை வழங்கவும் எஸ்பிஐ முயற்சித்து வருகிறது. ஆனால் வங்கிகளுக்கு வந்து செய்யப்படும் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது. வாடிக்கையாளர்கள் வேலை நிறுத்தத்தின்போதும் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங், யோனோ, மொபைல் பேங்கிங், யுபிஐ மற்றும் டிஜிட்டல் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஏடிஎம் மற்றும் யுபிஐ சேவைகள் செயல்படுமா?: கிளைக்கு செல்லாமல் செய்யப்படும் எல்லா பரிவர்த்தனையும் வேலைநிறுத்தத்தின்போதும் வேடிக்கையாளர்கள் தொடர்ந்து செய்யலாம். பொதுத்துறை வங்கிகளின் யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் டிஜிட்டல் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
வங்கி ஊழியர்கள் ஏன் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்?: ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் 9 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு தான் யுனைட்டட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன். இந்த கூட்டமைப்பு தற்போது பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான காரணம் 2024-ஆம் ஆண்டில் 5 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்ற முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த முறை இன்று வரையில் அமல்படுத்தப்படவில்லை. இது உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வேலை நிறுத்தம். அதோடு பர்ஃபார்மன்ஸ் லிங்க்ட் இன்சென்டிவ் (PLI) திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்றால் அக்டோபர் 26 வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ஊழியர் சங்கங்கள் எச்சரித்து வருகின்றன.
வங்கி வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?: வங்கிக்கு சென்று செய்ய வேண்டிய முக்கிய பணிகள் ஏதாவது இருந்தால் அதை செப்டம்பர் 26-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்வது நல்லது. இன்றோடு சேர்த்து இன்னும் 4 நாட்கள் உள்ளன.
அதன் பிறகும் செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் இயங்கும். இருந்தாலும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்தால் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் சில சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே முன்கூட்டியே கிளைக்கு சென்று முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்


Click it and Unblock the Notifications
