நாடு முழுவதும் இன்று முதல் புதன்கிழமை வரை நடைபெற இருந்த நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான UFBU ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் நள்ளிரவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களில் 90 சதவீதத்தினரை பிரதிநிதித்துவம் செய்யும் 7 யூனியன்களின் கூட்டமைப்பான UFBU (United Forum of Bank Unions), ஐந்து நாட்கள் வேலை வாரம் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து இந்த மூன்று நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்பது ஊழியர்களின் முக்கிய கோரிக்கை.

அதுமட்டுமில்லாமல் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம், ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன் வைத்திருந்தனர். ஏற்கனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11 அன்று ஒரு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் செப்டம்பர் 28,29,30 ஆகிய மூன்று தொடர் வேலைநிறுத்தமும் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபடப் போவதாக எச்சரித்திருந்தன.
இந்த 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து அரசு சார்பில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு முன் கூட்டியே சம்பளம் வரவு வைக்கப்பட்டது, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினமான நேற்று அனைத்து அரசு வங்கிகளும் வழக்கம் போல இயங்கின. இந்நிலையில் கடைசி நிமிடத்தில் திடீர் திருப்பமாக வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9:30 மணி அளவில் இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாட்களாக அறிவிப்பது குறித்து விவாதிக்க, உடனடியாக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு அனைத்து தரப்பினரிடமும் மற்றும் குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஏற்புடைய ஒரு தீர்வை ஆராய்ந்து வழங்கும் என உடன்பாடு ஏற்பட்டது. இதர நிலுவை பிரச்சனைகளும் விரைவாக தீர்க்கப்படும் வகையில் விவாதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
எனவே இன்று முதல் புதன் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அனைத்து போராட்டங்களும், வேலைநிறுத்த நடவடிக்கைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர முடிவுக்கு வரவில்லை. கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு நிரந்தரமாக முடிவுக்கு வரவில்லை என்றால் மீண்டும் வேலை நிறுத்தம் நடைபெற வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் வழக்கம் போல வங்கி கிளைகளுக்கு சென்று வங்கி சேவைகளை பெற முடியும். எஸ்பிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்பட அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் இன்று முதல் வழக்கம் போல இயங்கும்.


Click it and Unblock the Notifications


