நம்மில் பலருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அப்படி கிடையாது. ஒரு ஆண்டுக்கு குறிப்பிட்ட வரம்பை தாண்டி, நீங்கள் பணம் எடுத்தால் அவற்றுக்கு வரி விதிக்கப்படும். தேவையற்ற வரி செலவுகளைத் தவிர்க்க பணத்தை எடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கான வரம்புகள், வரி விதிமுறைகள், ATM கட்டணங்கள் போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைக்க உதவும். இந்தக் கட்டுரையில் அது குறித்த விரிவாகப் பார்ப்போம்.
வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்புகள்: எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 194N-இன் படி ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாத நபர்களுக்கு, இந்த விதி பொருந்தும். இது போன்ற நபர்கள் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் நிலையங்கள் என எதிலிருந்து வேண்டுமானாலும் ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான தொகையை எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
வழக்கமான வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான நன்மைகள்: தொடர்ந்து சரியான முறையில் ITR தாக்கல் செய்பவர்களுக்கு, அதிக வரம்பு உள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி, தபால் அலுவலகம் அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில் இருந்து டிடிஎஸ் செலுத்தாமல் ஒரு நிதியாண்டில் ரூ. 1 கோடி வரை ரொக்கமாக எடுக்கலாம்.
TDS விகிதங்கள்: இந்த விதியின் கீழ், ஒரு நிதியாண்டில் நீங்கள் பணம் எடுப்பது ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால், 2% டிடிஎஸ் கழிக்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக ITR தாக்கல் செய்யாத நபர்களுக்கு, ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான பணம் எடுப்பதற்கு 2% டிடிஎஸ், ரூ. 1 கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு 5% டிடிஎஸ் பொருந்தும்.
ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம்: வங்கிகள் இப்போது வரம்பை மீறும் ஒரு ATM பரிவர்த்தனைக்கு ரூ. 21 வசூலிக்கின்றன. முன்பு இந்தக் கட்டணம் ரூ. 20-ஆக இருந்தது. பெரும்பாலான வங்கிகள் தங்கள் சொந்த ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளையும் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து 3 இலவச பரிவர்த்தனைகளையும் வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications