சென்னை: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு போல், தற்போது ஏடிஎம் (ATM) இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வங்கிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. அரசின் "ஜெம்" (GeM - Government e-Marketplace) தளம் வழியாக ATM கொள்முதல் செய்வதற்கான விதிமுறைகளில் தெளிவின்மை மற்றும் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் தாக்கம் ஆகியவை இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் அதிகாரிகளுடனான கூட்டத்தில், ATM பற்றாக்குறை குறித்து வங்கி அதிகாரிகள் கூறி உள்ளனர். ATM விற்பனையாளர்களிடம் போதிய உற்பத்தி இல்லை என்பதே ஒரு பெரிய பிரச்சனை" என்று மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) ஆகிய இரண்டிடமும் இந்த பிரச்சனை குறித்து வங்கிகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த உற்பத்தி இருப்பதற்கான ஆரம்பக் காரணம் FY20-இல் செயல்படுத்தப்பட்ட 'மேக் இன் இந்தியா' திட்டம் என்றும், விற்பனையாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்த நேரம் எடுத்த கொண்டதனால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய ATM சந்தை 2024-ஆம் ஆண்டு முதல் 2032-ஆம் ஆண்டுக்குள் 9.2 சதவீத ஆண்டு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு வங்கி நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய அரசின் GeM தளம் வழியாக கட்டாயமாக ATM கொள்முதல் செய்வது, பொது வங்கிகளுக்கு மற்றொரு சிக்கலாக உள்ளது என்று தெரிவித்தார்.
வங்கிகள் ஏன் GeM தளம் வழியாக ஏடிஎம் இயந்திரங்களை வாங்குகின்றன?: வங்கிகள் அனைத்தும் GeM தளங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கின்றன. GeM தளம் என்பது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வர்த்தக தளமாகும். இதில் பல்வேறு விற்பனையாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட தயாரிப்புகளை விற்கின்றனர். அவற்றில் வங்கிகள் தங்களுக்கு தேவையானவற்றை ஒப்பிட்டு பார்த்து போட்டி விலையில் தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும் மற்றும் மாநில அரசு அனைத்திற்கும் சிறந்த வர்த்தக தளமாக கருதப்படுகிறது.
இதன் மூலம் GeM தளத்தில் விற்பனையாகும் ATM இயந்திரங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தர கட்டுப்பாடுகளைக் கொண்டது. இதன் மூலம் வங்கிகள் தரமான இயந்திரங்களை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும் கொள்முதல் செயல்முறை மிகவும் விரைவாகவும் எளிதானதாகவும் நடைபெறும். சிறு தொழில் முனைவோர்களும் GeM தளத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ATM இயந்திரங்களை அரசாங்க வங்கிகளுக்கு வழங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
அனைத்து ATM விற்பனையாளர்களும் ஜெம் தளத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதுவும் ஏடிஎம் இயந்திரங்களின் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. வங்கிகள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றினால், சுயமாக ATM-களுக்கான விண்ணப்பக் கோரிக்கைகளை (RFP) வெளியிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வங்கிகள் கோரிக்கை வைத்துள்ளன.


Click it and Unblock the Notifications