மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ - யின் மொத்த வங்கி இருப்பு 2024 ஆம் ஆண்டில் பல மடங்கு உயர்ந்துள்ளது. பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் பிசிசிஐயின் வங்கி இருப்பு தொகை இதுவரை இல்லாத அளவாக 20,686 கோடி ரூபாய் என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய ஒரு கிரிக்கெட் சந்தையாக இந்தியா திகழ்கிறது. சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இந்தியாவில் கிரிக்கெட்டை மக்கள் உயிராக கருதுகின்றனர் . எனவே கிரிக்கெட் போட்டி என்றாலே இந்தியாவே திருவிழா கோலம் பூண்டது போல கொண்டாடும். எனவே தான் பிசிசிஐ உலக அளவில் மிக சக்தி வாய்ந்த மற்றும் செல்வ வளம் மிகுந்த ஒரு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பிசிசிஐயின் வங்கி இருப்பில் கூடுதலாக 4200 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிமங்கள் மற்றும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமங்கள் மூலமே பெருமளவிலான வருமானம் பிசிசிஐக்கு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் பிசிசிஐ-க்கான மிகப்பெரிய வருமான ஆதாரங்களாக மாறி இருக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளுக்கான ஊடக உரிமம் 48,390 கோடி ரூபாய் என ஐந்தாண்டு கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில் பிசிசிஐ வசம் இருந்த ரொக்க மற்றும் வங்கி இருப்பு அளவு 16,493 கோடி ரூபாய். அதுவே 2024 ஆம் ஆண்டில் 20,686 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்ட ஆவணத்தின் அடிப்படையில் பிடிஐ நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
2023 - 24 ஆம் நிதி ஆண்டில் பிசிசிஐ 7,476 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் என கணித்திருந்தது ஆனால் அதைவிட 8995 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. 2024-25 ஆம் நிதி ஆண்டில் பிசிசிஐயின் வருமானம் 10504 கோடி ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல பிசிசிஐ-க்கான செலவினம் 2348 கோடி ரூபாயாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 1928 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நிறுவப்பட்டது. 2026ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2029 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ தான் நடத்த இருக்கிறது. தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி, தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி, 19 வயதுக்கு உட்பட்ட தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி, 19 வயதுக்கு உட்பட்ட தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியினர் பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications