இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது பதவி வகித்து வருபவர் ராகுல் டிராவிட்.
விரைவில் இவரது பதவிக் காலம் முடிய உள்ளது. இதனை அடுத்து இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆள் தேடும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இறங்கியுள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர் அமித்ஷா, மகேந்திர சிங் தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரில் போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய மே 27ஆம் தேதி கடைசி நாளாக பிசிசிஐ அறிவித்திருந்தது. பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பத்தையும் கூகுள் ஃபார்ம் வடிவத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
விண்ணப்பம் செய்வதற்கான தேதி முடிவடைந்த நிலையில், பெறப்பட்ட விண்ணப்பங்களை பிசிசிஐ தரப்பு ஆய்வு செய்த போது பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தன. 3,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானவை போலி என தெரிய வந்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் அரசியல் துறையில் பிரபலமானவர்களின் பெயரில் போலி விண்ணப்பங்கள் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் மகேந்திர சிங் தோனி, பிரதமர் நரேந்திர மோடி அமித்ஷா உள்ளிட்டோர்களின் பெயரில் போலி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய ஆண்களுக்கு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கூகுள் படிவங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி உள்ளிட்டோரியின் பெயர்களில் கூட விண்ணப்பங்கள் வர பெற்றிருக்கின்றன என கூறியுள்ளது.
கடந்த முறையும் பிசிசிஐக்கு இதே போல பல போலியான விண்ணப்பங்கள் வந்தன என சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு எத்தனை பெரிய கௌரவம் இருக்கிறது, குறிப்பாக ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு எவ்வளவு முக்கியமானது அதற்கு சாதாரணமாக கூகுள் படிவம் மூலமா விண்ணப்பிக்க செய்வீர்கள் என பிசிசிஐ-ஐ நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சிறு சிறு ஊர்களில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் கூட இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தது 30 டெஸ்ட் போட்டிகள் அல்லது 50 ஒருநாள் போட்டிகள் விளையாடி இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நாட்டின் கிரிக்கெட் அணிக்கு 2 ஆண்டு காலம் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications