இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலம் கூடுதலாக 5,120 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டு பிசிசிஐக்கு கிடைத்த 2,367 கோடி ரூபாயை விட 116 சதவிகிதம் அதிகமாகும்.
பிசிசிஐ அமைப்பு தன்னுடைய ஆண்டு நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பிசிசிஐக்கு கிடைத்த வருமானம் அதன் கையிருப்பு ஆகியவை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் படி 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐ மொத்தமாக ஈட்டிய தொகை 11,769 கோடி ரூபாய் ஆகும். அதே வேளையில் பிசிசிஐயின் செலவினம் 6648 கோடி ரூபாயாகும். பிசிசிஐ செய்த செலவு கடந்த ஆண்டை விட 66% உயர்ந்துள்ளது.

பிசிசிஐ வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில், பிசிசிஐக்கு ஐபிஎல் மூலம் வருமானம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றின் மூலமே பிசிசிஐ அதிக வருமானத்தை பெற்றுள்ளது. 2023 ஐபிஎல் போட்டியில் பிசிசிஐக்கு ஊடக உரிமம் மூலம் கிடைத்த வருமானம் 131% அதிகரித்து 8,744 கோடி என உயர்ந்துள்ளது.
அதேபோல அணி உரிமைக்கான கட்டணம் 22 சதவீதம் அதிகரித்து 2,117 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது . இது மட்டுமின்றி ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைத்த வருமானம் 847 கோடி ஆகும். 2023 மற்றும் 2024 ஆம் நிதி ஆண்டுகளில் பிசிசிஐ சார்பில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி 2038 ரூபாய் ஆகும். 2021 ஆம் ஆண்டு டிஸ்னி ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமங்களை பெற்றிருந்தது.
இதன்படி 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கு இந்த நிறுவனம் செலுத்திய தொகை 23,575 கோடி ரூபாய் ஆகும். அதேபோல ஐபிஎல் போட்டிகளை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்வதற்கு ஜியோ சினிமா ஒப்பந்தம் பெற்றிருந்தது. இதற்காக ஜியோ சினிமா வழங்கிய தொகை 23,758 கோடி ரூபாய் ஆகும்.
பிசிசிஐ ஐபிஎல் டைட்டில் உரிமங்களை டாடா சன்ஸ் குழும்பத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கியது. இதற்காக டாடா சன்ஸ் 2500 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. ஏஞ்ச்ல் ஒன், மை சர்க்கிள் நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப்பாஜ 1,485 கோடி ரூபாயை வழங்கியுள்ளன. உலகிலேயே மிகவும் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த ஒரு கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பாக பிசிசிஐ செயல்பட்டு வருகிறது.
பிசிசிஐ அமைப்பினை பொருத்தவரை 16,493.2 கோடியை வங்கி கையிருப்பாக வைத்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10,000 கோடி ரூபாய் அதிகமாகும். அதேபோல மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக 377 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மொத்தமாக ஊடக ஒளிபரப்பு உரிமம், அணி உரிமை கட்டணம் ஆகியவற்றின் மூலம் 636 கோடி ரூபாய் பிசிசிஐ க்கு வருமானமாக கிடைத்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications