பொதுவாகச் சுரங்கம், சுரங்கத் துறை என்றாலே சீன நிறுவனங்கள் தான் கிங்மேக்கர் என்ற நிலைப்பாடு உள்ளது. இந்த நிலையில் சீன நிறுவனத்துடன் போட்டிப்போட்டு ஒரு மாபெரும் சுரங்க திட்டத்தை இந்திய நிறுவனம் கைப்பற்றியுள்ளது, அதுவும் வேறொரு நாட்டில்.
சீனா நிறுவனங்கள் லித்தியம், அரிய உலோக தாது என பல சுரங்கள் துறை திட்டங்களைச் சீனாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் செயல்படுத்தி வருகிறது, இதற்காக பெரும் கட்டமைப்பை வைத்திருக்கும் காரணத்தால் சீனா நிறுவனங்களுடன் போட்டிப்போட முடியாமல் சர்வதேச நிறுவனங்கள் தெறித்து ஓடி வரும் சூழ்நிலையில்..

இந்தியாவைச் சேர்ந்த Lloyds Metals and Energy, பப்புவா நியூ கினியா நாட்டில் இருக்கும் மிகப்பெரிய தங்கம் மற்றும் காப்பர் சுரங்கத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து மீண்டும் உலோக உற்பத்தியைத் துவங்கும் திட்டத்தை பெரும் போட்டிக்கு மத்தியில் வென்றுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டின் Bougainville என்னும் தீவில் Panguna என்ற மிகப்பெரிய தங்கம் மற்றும் காப்பர் சுரங்கம் உள்ளது. இந்தச் சுரங்கத்தில் சுமார் 53 லட்சம் டன் காப்பர் மற்றும் 1.93 கோடி அவுன்ஸ் தங்கமும் இருப்பதாகச் சமீபத்தில் கணக்கிடப்பட்டது.
இந்த தங்கம் மற்றும் காப்பர்-ன் மொத்த மதிப்பு 160 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.15 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
ஆனால், இவ்வளவு வளம் மிக்க சுரங்கம் 1989-ஆம் ஆண்டு வெடித்த உள்நாட்டு கலவரம் மூலம் 36 வருடமாகச் செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில் இச்சுரங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளை Bougainville அரசும், அம்மாநில அரசு நிறுவனமான Bougainville Minerals Ltd இணைந்து முயற்சிகளைத் துவங்கி, உலகளவில் இருக்கும் நிறுவனங்களிடம் விருப்ப விண்ணப்பங்களைப் பெறத் துவங்கியது.
சீனாவின் என்டரி..
Bougainville சுரங்கத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான திட்டத்தைப் பெறச் சீன அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய சுரங்க நிறுவனம் CMOC போட்டியிட்டது. இந்த நிறுவனத்திற்குத் தேர்வுக் குழுவில் பெரும் வரவேற்பும் இருந்தது, அதுவும் எதிர்பார்த்தது தான்.
ஆனால் இந்திய நிறுவனமான Lloyds Metals and Energy மாறுபட்ட திட்டத்தை முன்வைத்து மொத்த கவனத்தையும் ஈர்த்து 160 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை அலேக்காக தூக்கிச் சென்றது.
Lloyds நிறுவனம் செய்தது என்ன..?
சீன நிறுவனம் வழக்கம் போல் மற்ற நாடுகளில் தான் செயல்படுத்தும் திட்டத்தைப் போல், இந்த சுரங்கத்தின் முழு உரிமை மற்றும் கட்டுப்பாட்டைக் கோரி தனது திட்டத்தை முன்வைத்தது.
ஆனால் இந்திய நிறுவனமான Lloyds நிர்வாகம், Bougainvill அரசிடம் இந்த சுரங்கத்தின் உரிமையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், சுரங்கத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் அனைத்து பணிகளையும் ஒரு பார்ட்னராக இருந்து நாங்கள் உங்களுக்குச் செயல்படுத்திக் கொடுக்கிறோம் என தெரிவித்தது.
இதில் ஷாக்கான சீனா CMOC போட்டியில் இருந்து அப்படியே வெளியேறியது. இந்த சுரங்கம் 36 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட முக்கியமான காரணம் சுற்றுச்சூழலில் பாதிப்பு, பணியாளர் நலன், உள்ளூர் மக்களின் எதிர்ப்பும், கலவரம் ஆகியவை தான்.
இந்த நிலையில், மீண்டும் இதுபோன்ற சூழ்நிலை வரக்கூடாது என்பதை உணர்ந்து அந்நாட்டு அரசுடன் இணைந்து இந்த சுரங்கத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டத்தை இந்திய நிறுவனமான லாய்ட்ஸ் முன் வைத்தது.
லாய்ட்ஸ் கொடுத்துள்ள திட்டத்தின் படி Bougainvill அரசு சுரங்கத்தின் உரிமையை இழக்காது, இதேபோல் வெளிநாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்பமும், முதலீடும், அனுபவமும் பயன்படுத்த முடியும்.
இதனால் இத்திட்டத்தைத் தேர்வுக் குழு விரும்பிய நிலையில் மொத்த திட்டத்தையும் லாய்ட்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்து, சுரங்க பணிகளுக்கான முதல் கட்ட ஆய்வை துவங்க அனுமதி கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?
சர்வதேச அளவில் சீனா கிங் மேக்கராக இருக்கும் சுரங்க துறையில் இந்தியா போட்டிப்போட்டு இத்திட்டத்தை வென்றுள்ளது உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய மெசேஜ் ஆகும்.
தங்கத்தைப் போலவே, காப்பர் இன்றைய தொழில்துறையில் மிக முக்கியமான உலோகமாக மாறியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் துவங்கி, மின்சார உற்பத்தி, விநியோகம், டேட்டா சென்டர் என பல துறையில் காப்பர் மிகவும் முக்கியமான உலோகமாக மாறி வருகிறது.


Click it and Unblock the Notifications