பெங்களூரு: பெங்களூருவில் வழக்கத்துக்கு மாறாக வெயில் வாட்டி வதைக்கிறது. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்களுக்கு தற்போது பீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். இரண்டு நாள் மழையால் ஹாட் பெங்களூர் இப்போ சில்லென்ற பெங்களூராக மாறியது.
நகரில் பீருக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும், சப்ளை குறைவாக இருப்பதாகவும் பீர் விற்பனையில் ஈடுபட்டுள்ள கடைகள் தகவல் தெரிவிக்கின்றன. குறிப்பாக கோல்டு பீருக்காக பெங்களூருவாசிகள், கடை கடையாக ஏறி இறங்குவதாகவும் ஆனால் வெறும் கையோடு தான் திரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

வெயில் வாட்டி வதைப்பது, ஐபிஎல் போட்டிகள், தேர்தல் ஆகியவை பீருக்கான தேவை அதிகரிக்க காரணமாக உள்ளது. சில்லறை விற்பனை கடைகளுக்கு டிப்போக்களில் இருந்து பீரை கொண்டு வந்து டெலிவரி செய்வதில் தாமதம் இருப்பதாகவும், இதன் காரணமாக தட்டுப்பாடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெங்களூருவில் பீருக்கான தேவை என்பது அதிகரித்திருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். தங்களுக்கு பிடித்த கோல்டு பீர் கிடைக்காமல் கோடையை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் புலம்புகிறார்களாம்.
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் பெங்களூருவில் பீர்களுக்கான தேவை என்பது 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா நகரில் செயல்பட்டு வரக்கூடிய பீர் கடை உரிமையாளர் ஒருவர், மற்ற மதுபானங்களுடன் ஒப்பிடுகையில் பீருக்கான தேவை , குறிப்பாக கோல்டு பீருக்கான தேவை என்பது கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் முன்பை விட 50 சதவிகிதம் விற்பனையும் உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் இதற்கான தேவை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 8,500 லிட்டர் பீர் மட்டுமே விற்பனை செய்த நிலையில் தற்போது 20,000 லிட்டர் பீர் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக மற்றொரு விற்பனையாளர் கூறியுள்ளார்.
வெயிலின் தாக்கம், ஒரு புறம் காரணமாக இருந்தாலும் ஐபிஎல் சீசன் நடைபெறுவது மற்றொரு காரணம். ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள், குறிப்பாக ஆர்சிபி போட்டி நடைபெறும் நாட்களில் ரெஸ்ட்டோ பார்கள் தள்ளுபடிகளை அறிவிப்பதால் பீருக்கான தேவை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றர். இந்த டிமாண்டை பயன்படுத்தி சில கடைகளில் அதிக விலைக்கு பீர் விற்பனை செய்வதாகவும் ஒரு குற்றச்சாட்டை எழுந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications