இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு கடந்த சில ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதுள்ள சாலைகளின் புனரமைப்பு மற்றும் புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் நாட்டின் முகத்தை மாற்றுகின்றன. நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் சாலை நெட்வொர்க் விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த விரைவுச்சாலை எது? அது எங்கு அமைந்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மும்பை-பூனே விரைவுச்சாலை ஆனது, 2002 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியின் போது கட்டப்பட்டது. இது மும்பை நகரத்தை புனேவுடன் இணைக்கும் விரைவுச்சாலையாகும். நாட்டின் முதல் 6 வழிச் சாலை இதுவாகும். மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் இந்த சாலையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 94.5 கி.மீ நீளமுள்ள இந்த சாலை அமைக்க அப்போது ரூ.1,65,000 கோடி செலவானது. இந்த மும்பை-புனே விரைவுச்சாலை, அதிகாரப்பூர்வமாக யஷ்வந்த்ராவ் சவான் விரைவுச்சாலை என்று அழைக்கப்படுகிறது.

விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், மும்பை-புனே பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து 1 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இரு நகரங்களுக்கும் தினமும் செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சஹ்யாத்ரி மலைகள் வழியாக இந்த பயணம் மிகவும் இயற்கை எழில் நிறைந்தது. இந்த மலைத்தொடரை கடக்க சுரங்கங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படும் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ ஆகும்.
இந்த விரைவுச்சாலை நவி மும்பையில் உள்ள கலம்போலியில் இருந்து தொடங்குகிறது. இது புனேவில் உள்ள கிவாலே வரை நீண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கலப்பூர் மற்றும் தெல்கானில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகள் உட்பட மொத்தம் 5 சுங்கச்சாவடிகள் உள்ளன. சாலையின் இருபுறமும் மூன்று லைன் கான்கிரீட் சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் ஒரு வழி பயணத்திற்கு ரூ.320 கட்டணம் செலுத்த வேண்டும். மினி பஸ்கள் மற்றும் டெம்போ வேன்கள் ரூ.495 செலுத்த வேண்டும். பேருந்துகளுக்கு ரூ.940 ஆகும். டூ ஆக்சில் லாரிகளுக்கு ரூ.685, மூன்று ஆக்சில் லாரிகளுக்கு ரூ.1,630, நான்கு ஆக்சில் லாரிகள் மற்றும் இதர இயந்திரங்களுக்கு ரூ.2,165 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாட்டின் மற்ற முக்கிய சாலைகளை விட இந்த பாதையில் சராசரியாக கட்டணம் அதிகம். மற்ற வழித்தடங்களில் சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.2.40 கட்டணமாக இருக்கும் போது, மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வேயில் ரூ.3.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2023 இல், MSRDC அறிவிப்பைத் தொடர்ந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) அறிக்கையின்படி, தற்போதைய விகிதம் 2030 வரை தொடரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications