சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதற்கான ஓட்டுனர் இல்லாத ரயில்களை தயாரித்து வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
இதில் பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்ற நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய பிஇஎம்எல் (BEML) லிமிடெட் நிறுவனம் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் கோரி இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று காரிடார்கள் இருக்கின்றன . இந்த திட்டத்தின் மதிப்பீடு 63, 246 கோடி ரூபாய் ஆகும். இந்த திட்டத்திற்காக ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் ஒப்பந்தம் கோரப்பட்டு Alstom நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிறுவனம் முதல் ஓட்டுனர் இல்லா ரயிலை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. தற்போது இந்த ரயிலானது மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது ஒப்பந்தம் கோரும் பணி தற்போது நடைபெற்றது.
மாதவரம் முதல் சிப்காட் வரையிலான மூன்றாவது காரிடார் மற்றும் மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது காரிடார் ஆகிய இரண்டு காரிடார்களிலும் இயங்கும் வகையில் ரயில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
இதில் BEML நிறுவனம் தான் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதற்கான ஆவணங்கள் மேலும் சில ஒப்புதல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் BEML நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாத இறுதிக்குள்ளேயே ஒப்பந்தம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதன் கீழ் BEML நிறுவனம் 210 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 3, 600 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் பெங்களூருவில் தயாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முதலாவதாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 108 ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது இரண்டாவது ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாத ரயில்கள் என்பதால் இது பயன்பாட்டுக்கு வரும் தொடக்க காலத்தில் roving attendants பணியில் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 90 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் இயங்கும் என்றும் ஒருமுறை ஆயிரம் பேர் வரை அழைத்து சென்று செல்லக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications