பிரிட்டன்: பிரிட்டனை சேர்ந்த பென் நியூட்டன் என்ற இளைஞர் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமலேயே டெல்லாய்ட் என்ற மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தில் 10 கோடி ரூபாய் ஊதியத்திற்கு பணியில் சேர்ந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் முழுவதும் இது தான் தற்போது பேசு பொருளாக இருக்கிறது.
பிரிட்டனின் டோர்செட் பகுதியை சேர்ந்தவர் பென் நியூட்டன். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி வந்தார், இவரது தாயார் ஒரு டிராவல் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். சிறு வயதிலேயே வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் டெலாய்ட் நிறுவனத்தின் ப்ரைட் ஸ்டார்ட் அப்ரண்டீஸ் ப்ரோக்ராம் எனப்படும் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து தொழில்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு பென்னுக்கு கிடைத்தது. படிப்பை பாதியிலேயே கைவிட்ட நபர்களுக்காக இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பென் நியூட்டன் ப்ரைட்ஸ்டார்ட் அப்ரண்டீஸ் திட்டத்தில் சேர்ந்தார். அதே சமயத்தில் தனக்கு வார்விக் பல்கலைக்கழகத்தில் கணிதம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், இரண்டில் எதை தேர்வு செய்வது ? கல்லூரி சென்று படிப்பதா அல்லது அப்ரண்டீஸ் திட்டத்தில் சென்று நேரடியாக வேலை வாய்ப்பு பயிற்சி பெறுவதா? என்ற குழப்பம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பணம் தேவைப்படுவதால் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு செல்வது என முடிவு செய்துள்ளார்.
வேலை வாய்ப்பு பயிற்சியின் மூலம் தற்போது டெலாய்ட் நிறுவனத்திலேயே 10 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு தனக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் நடைபெற்றதாகவும், அவற்றில் தான் டெலாயிட்டை தேர்வு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தற்போது அங்கீகரிக்கப்பட்ட அக்கவுண்டண்ட் மற்றும் ஆடிட்டராக பென் நியூட்டன் உயர்ந்துள்ளார்.

டெலாய்ட் நிறுவனம் சர்வதேச அளவில் நிதி சேவைகளை வழங்கும் பிரபலமான நிறுவனமாகும். 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு வரி கணக்கிடுவது, தணிக்கை செய்வது, வணிக ஆலோசனை வழங்குவது மற்றும் நிதி ஆலோசனை வழங்குவது போன்ற பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் செய்கிறது. 1845 ஆம் ஆண்டு வில்லியம் பெல்ஸ் டெலாய்ட் என்பவரால் பிரிட்டனில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வருமானம் 6,490 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். சுமார் ஐந்து லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.
டெல்லாய்ட் நிறுவனம் கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளித்து வேலை வழங்கும் நோக்கில் தொடங்கிய திட்டம் தான் ப்ரைட்ஸ்டார்ட் பயிற்சி திட்டம். படிப்பை தொடர முடியாதவர்களை நேரடியாக திட்டத்தில் சேர்த்து வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து, நிறுவனமே பணிக்கு எடுத்துக் கொள்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications