பெங்களூரில் வீட்டு வாடகை சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கிய தொழில் மையமாக இருப்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களை விட்டு பெங்களூருக்கு குடி பெயர்கின்றனர். இதன் காரணமாக இங்குள்ள வாடகை வீடுகளுக்கு எப்போதும் டிமாண்ட் இருக்கும். சாதாரண சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஒருவர் பெங்களூரில் வீடு எடுத்து தங்குவது என்பது சற்று சவாலானது என்று தான் சொல்ல வேண்டும்.
இங்கு வீட்டு வாடகை செலவுகள் அதிகரித்து வருவதை இதற்கு முன்னர் பலரும் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். அதேபோல ரெட்டிட் பயனர் ஒருவர், ஒரு வீட்டு உரிமையாளர் மாதத்திற்கு 40,000 ரூபாய் வாடகையும், ரூ.4.8 லட்சம் பாதுகாப்பு கருதி அட்வான்ஸும் வசூலிப்பதாக போஸ்ட் செய்திருந்தார். இது அந்நகரத்தில் வாடகைகள் எவ்வாறு அதிகரித்திருக்கிறது என்பதை பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

"நான் பெங்களூருவில் நல்ல வாடகைக்கு வீடுகளை தேடிக்கொண்டிருந்தேன்.. அப்போதுதான் ரூ. 40,000 வாடகைக்கு 1BHK வீடும், ரூ. 75,000 முதல் ரூ. 90,000 வாடகைக்கு 2 முதல் 3 BHK வீடும் கிடைத்தது", என்று எழுதியிருந்தார். இவர் கோரமங்கலா மற்றும் HSR லேஅவுட் பகுதிகளில் 1 BHK வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
"இங்கு வாடகைக்கு வீடு எடுப்பது என்பது நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை.. ஒரு வீட்டு உரிமையாளர் சொத்தை மட்டும் வைத்திருந்தால் ரூ.4.8 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் கேட்கலாமா?" என்ற கேள்வியையும் அந்த நபர் முன் வைத்திருந்தார்.
HSR லேஅவுட் மற்றும் கோரமங்களா போன்ற பகுதிகள் நகரத்தின் உயர் ரக குடியிருப்புகளாக உள்ளன. அனால் அதற்காக இவ்வளவு வாடகை ஏற்றதா? என்ற கேள்வியை முன்வைத்து பல ரெட்டிட் பயனர்கள் விவாதிக்கத் தொடங்கினர்.
அதில் ஒரு பயனர் "இங்கு வாடகை நிலை மிக மிக மோசமாக உள்ளது. நானும் இதே நிலையை தான் கடந்து வருகிறேன் பெங்களூரும் மும்பையைப் போன்றது தான் என்பதை இப்போதுதான் முழுமையாக புரிந்து கொண்டேன்" என்று எழுதியிருந்தார்.
சில காலமாக பெங்களூரில் வீட்டு வாடகைகள் 23 முதல் 30 சதவீதம் வரையில் அதிகரித்து வருகின்றன. இந்திரா நகருக்கு அருகில் உள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. பெங்களூரு புறநகர்ப் பகுதிகளான தெற்கு பெங்களூரு மற்றும் வைட்ஃபீல்டின் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் நியாயமான விலையில் வீடுகள் கிடைக்கின்றன.
கோரமங்கலா, இந்திராநகர், HSR லேஅவுட் மற்றும் ஹெப்பால் போன்ற பகுதிகளில், 1BHK அடுக்குமாடி குடியிருப்புகள், அதில் வழங்கப்படும் வசதிகளைப் பொறுத்து ரூ. 40,000 மாத வாடகையையும் தாண்டுவதாக தரகர்கள் கூறுகின்றனர். வாடகையைத் தாண்டி பெங்களூருவில் பாதுகாப்பை கருதி செக்யூரிட்டி டெபாசிட்டாக கேட்கப்படும் அதிக தொகைக்கு தான் பலரும் பயப்படுகின்றனர். ஏனெனில் ஆறு முதல் ஒன்பது மாத வாடகையை செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் வீட்டு உரிமையாளர்கள் கேட்கின்றனர்..
பெங்களூரில் வாடகை வீட்டுச் சந்தை மும்பையைப் போலவே வெறும் வணிகம் போல மாறி வருகிறது என்பதை மறுக்க முடியாது. வீட்டு உரிமையாளர்கள் அதிகபட்ச லாபம் ஈட்டும் நோக்கில் வாடகை மற்றும் வைப்புத்தொகையை நிர்ணயித்து வருகின்றனர். இதனால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் பெங்களூரில் வசிப்பது கடினமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications