இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரமாக பெங்களூரு திகழ்கிறது. பெங்களூருக்கு ஏற்கனவே கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானம் 2030ஆம் ஆண்டுக்குள் தன்னுடைய பயணிகள் கையாளும் திறனை எட்டிவிடும் என கணிக்கப்படுகிறது. இதனால் பெங்களூருவுக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே கர்நாடக மாநில அரசு பெங்களூரின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை கட்டமைப்பில் மிக தீவிரமாக இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு நகரத்தில் இருந்து மிக தூரமாக இருக்கிறது என தொடர்ச்சியாக மக்கள் புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். இந்தநிலையில் நகரில் இருந்து மக்கள் எளிமையாக அனுகும் வகையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதில் கர்நாடக அரசு தீர்க்கமாக இருக்கிறது.

கர்நாடக மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் பெங்களூர் நகரில் இருந்து சற்று அருகிலேயே மூன்று இடங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. சோமானஹள்ளி, சூடாஹள்ளி ஆகிய இரண்டு இடங்கள் தெற்கு பெங்களூருவில் உள்ளது, மூன்றாவதாக சிக்கசூலூர் இது மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த மூன்று பகுதிகளையும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் நில அமைப்பு எப்படி இருக்கிறது ,சுற்றுப்புறங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கும் இதற்கும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்கள், தொழில்நுட்ப ரீதியிலான சில விளக்கங்களையும் கர்நாடக மாநில அரசிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கர்நாடக மாநில அரசு மூன்று பகுதிகளிலும் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கு ஒப்பந்த புள்ளி கோரி இருக்கிறது. மூன்றிலிருந்து நான்கு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பம் செய்திருப்பதாகவும் சில வாரங்களில் இந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விரிவான ஆய்வறிக்கை விமான நிலையத்தை இந்த மூன்று இடங்களில் அமைக்க முடியுமா முடியாதா ,தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமா, எவ்வளவு இதற்கு செலவாகும் , எந்த மாதிரியான உள்கட்டமைப்பு இங்கே சாத்தியப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்டிருக்கும். 2033 ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்து விட வேண்டும் என கர்நாடக மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
ஏற்கனவே ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கையை அனுப்பியது ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்து விட்டது. எனவே மத்திய அரசுக்கு தொழில்நுட்ப ரீதியான சாத்திய கூறுகள் கொண்ட புதிய திட்ட அறிக்கையை அனுப்பும் பணிகளை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசும் பெங்களூருவின் 2ஆவது விமான நிலைய பணிகளை தொடங்கிவிட்டது.


Click it and Unblock the Notifications