UNESCO அமைப்பால் 'உலகின் மிக அழகான விமான நிலையங்கள்' பட்டியலில் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இடம்பிடித்துள்ளது. இது பெங்களூர்-க்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கும் பெருமை, இதேபோல் மாநிலத்தின் பிற விமான நிலையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் புதிய போட்டி உருவாகும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்கச் சிலிக்கான் வேலி-யில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பெங்களூருவின் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ஐ நேரில் பார்த்துப் பாராட்டியுள்ளது டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை நகரைத் தளமாகக் கொண்ட ஹோம் டிசைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Cover-ன் கட்டிடக் கலைஞரும் (Architect), இணை நிறுவனருமான அலெக்சிஸ் ரிவாஸ், கெமெப்கவுடா சர்வதேச விமான நிலையத்தின் புதிய டெர்மினல் 2-ஐ வடிவமைப்பதில் இருக்கும் படைப்பாற்றலைப் பாராட்டி ஒரு டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய டெர்மினல் 2 இரவில் பிரமிக்க வைக்கிறது. இதுமட்டும் அல்லாமல் தான் இதுவரை பார்வையிட்ட விமான நிலையங்களில் மிகவும் தனித்துவமான விமான நிலையம் என்றும் அலெக்சிஸ் ரிவாஸ் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பெங்களூரு T2 சுமார் 255,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த விமான முனையத்தை "ஒரு தோட்டத்தில் விமான நிலையம்" என்ற கற்பனையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மொத்த விமான நிலையமும் வழக்கமான அம்சங்களுடன் இருந்தாலும் மரங்கள், செடிகள், நீர்வீழ்ச்சி, குளம் என இயற்கைக்கு ஒன்றிக் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

யுனெஸ்கோவின் 2023 பிரிக்ஸ் வெர்சாய்ஸ் உலகக் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு விருதுகளில் உலகின் மிக அழகான விமான நிலையங்களில் ஒன்றாக, பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 இடம்பிடித்துள்ளது.
பெங்களூரில் டி2 டெர்மினலில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மட்டும் இயங்க துவங்கி புதுப் பொழிவுடன் பெங்களூர் விமானப் பயணிகளை அசத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications