மக்களவைத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பெங்களூரில் ஜூன் மாத முதல் வாரம் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு நாட்களில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். இருந்தாலும் பப்கள் மற்றும் பார்கள் திறந்திருக்கும். ஆனால் அதில் ஆல்கஹால் கலக்காத பானங்கள் மற்றும் உணவுகளை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் இந்த உத்தரவால் பெங்களூரை சேர்ந்த மதுபான பிரியர்கள் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். 6 நாட்களுக்குத் தேவையான மதுபானத்தை வாங்கி வைப்பது என்றால் நிறைய செலவாகும். அதற்கு வழியில்லாதவர்கள், தினமும் சிறிது சிறிதாக வாங்கி அருந்தும் எளிய கூலித் தொழிலாளர்கள் வருத்தமடைந்துள்ளனர். இருந்தாலும் இப்போதே மதுபானங்களை நிறைய பேர் வாங்கி வீட்டில் வைக்கத் தொடங்கிவிட்டனர்.
6 நாட்கள் மதுக் கடைகள் மூடப்படுவது சற்று அதிகம்தான் என்று அவர்கள் புலம்புகின்றனர். குறைந்தபட்சம் மேலவை வாக்குப் பதிவு மற்றும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 3 மற்றும் 4 தேதிகளில் மட்டுமாவது கடைகளை மூடியிருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
பொதுத்தேர்தல் 2024இன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதியன்று வெளியாகும். இதனிடையே கர்நாடக மாநில மேலவையில் காலியாக உள்ள சீட்களுக்கு ஜூன் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் படி டாக்டர் சந்திரசேகர் பி பாடீல்- கர்நாடகா வடகிழக்கு, அயனுரு மஞ்சுநாதா- கர்நாடகா தெற்கு-மேற்கு, ஏ தேவகவுடா-பெங்களூரு, டாக்டர் ஒய்ஏ நாராயணசாமி- கர்நாடகா தெற்கு, எஸ்எல் போஜே கவுடா- கர்நாடகா தென்மேற்கு, மாரிதிப்பே கவுடா- கர்நாடகா தெற்கு ஆகியோர் ஜூன் 21ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர்.
இதனிடையே மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியான பிறகு மும்பையில் மதுபான விற்பனைக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications