இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக திகழக்கூடிய பெங்களூரு நகரில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி வரத்து நின்று போயிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா தற்போது அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளிடமிருந்து எல்பிஜி வாங்கி வருகிறது.
இருந்தாலும், வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட அளவுக்கு இன்னும் கொள்முதல் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டு விநியோகத்திற்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதே வேளையில் முன்னுரிமை அடிப்படையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டிலும் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்பிஜி தட்டுப்பாடு கேஸினை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுபவர்கள் நிலைமை மோசமாகியுள்ளது. இந்தியாவின் பிரதான நகரமாக கருதப்படும் பெங்களூருவில் பாதிக்கும் மேற்பட்ட கேஸ் நிலையங்கள் மூடப்பட்டிருப்பது பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூருவில் டோட்டல் கேஸ் நிறுவனம் தன்னுடைய அனைத்து கேஸ் விற்பனை நிலையங்களையும் மூடி இருக்கிறது. சூர்யா கேஸ் மற்றும் சூப்பர் கேஸ் ஆகிய நிறுவனங்களின் கேஸ் விற்பனை நிலையங்கள் நேற்று நண்பகலிலேயே அவுட் ஆஃப் ஸ்டாக் என போர்டு வைத்துவிட்டன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கேஸ் விற்பனை நிலையங்களில் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோக்கள் வரிசையில் காத்திருந்தன. இதற்கு இடையே எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஹெச்பி, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எல்பிஜியை ஒரு லிட்டருக்கு 85 ரூபாய் என விற்பனை செய்கின்றன. அதுவே தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் 125 ரூபாய் வரை விற்பனை செய்கின்றன. இந்த தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னர் ஒரு லிட்டர் எல்பிஜி விலை 58 ரூபாயாக தான் இருந்தது.

தனியார் கேஸ் நிலையத்தின் மேலாளர் சேத்தன் கவுடா டெக்கன் ஹெரால்டுக்கு அளித்துள்ள பேட்டியில் மூன்று நாட்களாக தங்களுக்கு ஸ்டாக் வரவில்லை என கூறுகிறார். வழக்கமாக தங்களுக்கு நான்கு டன் கேஸ் வரும், கடந்த சில வாரங்களாக இரண்டு டன்கள் மட்டுமே வந்தது, தற்போது அது கூட வரவில்லை எனக் கூறும் அவர் சப்ளை எப்போது பழைய நிலைக்கு திரும்பும் என எங்களுக்கு தெரியவில்லை என கூறி இருக்கிறார்.
பல்வேறு கேஸ் விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருந்ததை காண முடிகிறது. சில இடங்களில் மூன்று கிலோமீட்டர் வரை வாகனங்கள் வரிசையில் நின்றுள்ளன. அதிகாலை ஐந்து மணியிலிருந்து காத்திருந்தும் கேஸ் கிடைக்கவில்லை என ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் கூறியிருக்கின்றனர். இரண்டு நாட்களாக கேஸ் கிடைக்காமல் சவாரி எடுக்காமல் தவிக்கிறேன் எனக் கூறியிருக்கும் ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணசாமி எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய வாகனம் என்று போகலாம் என வருத்தப்படுகிறார்.
பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் இதற்கு முன்பு 58 ரூபாய்க்கு கிடைத்த கேஸ் தற்போது 125 ரூபாய்க்கு கிடைக்கிறது நிலைமை இப்படியே சென்றால் ஆட்டோ ஓட்டுவதையே விட்டுவிட வேண்டியதுதான் என கவலை தெரிவிக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகிவிட்டதாக வேதனைப்படுகின்றனர். இதற்கிடையே இந்தியன் ஆயில் நிறுவனம் தங்களுடைய அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் முழுமையாக செயல்படுகின்றன, போதிய அளவு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெரும்பாலான ஆட்டோ எல்பிஜி வாகனங்கள் பெட்ரோலிலும் இயங்கக்கூடியவை என்பதால் தயவு செய்து பெட்ரோலுக்கு மாறிக்கொண்டு உங்களுடைய பயணத்தை தொடருங்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
கேஸ் அடிப்படையிலான ஆட்டோக்கள் இயக்கம் நின்று போனால் பெங்களூரு நகரில் இயங்கும் ஆட்டோக்கள் எண்ணிக்கை குறையும். இதனால் ஆட்டோக்களுக்கான டிமாண்ட் அதிகமாகி கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications