பெங்களூரு: பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்கள் ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கக்கூடிய பைக் சேவைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .வாடிக்கையாளர்களை பொறுத்தவரை ஒரு நபராக இருக்கும்போது பைக்கில் சென்றால் குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்தினாலே போதும். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்களை பொறுத்தவரை இதனால் தங்களுடைய தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இந்த சூழலில் பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இதுபோல ரேபிடோ பைக் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் ரேபிடோ பைக் ஓட்டுநர்களையும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் மெட்ரோ ஸ்டேஷன்ல இருந்து வெளியே வந்த தான் ரேபிடோவில் வாகனம் புக் செய்ததாகவும் அப்போது அங்கே இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் அதை ரத்து செய்யுங்கள் நான் உங்களை அழைத்து செல்கிறேன் என கூறினாராம். மேலும் அவர் ரவுடியை போல பேசினாராம். இந்த நபர் அந்த பேச்சை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ரேபிடோவில் பைக் புக் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து அவரை சுற்றி வளைத்துக் கொண்டு மிரட்டினார்களாம்.
இந்த பைக்கில் நீ சென்றால் அவ்வளவுதான் என உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மிரட்டியுள்ளனர். மேலும் ரேபிடோ பைக் வந்தபோது ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பைக்கை அந்த பகுதிக்குள் வரவிடாமல் தடுத்து பைக் ஓட்டுநரையும் இந்த நபரையும் மிரட்டியுள்ளனர். ஒரு சிலர் உன்னுடைய கைகளை வெட்டி விடுவேன், உன்னுடைய வாழ்க்கையை ஒரு வழியாக்கி விடுவேன் ,உன்னை நரகத்திற்கு அனுப்பி வைத்து விடுவேன் என தொடர்ந்து மிரட்டியுள்ளனர். தன்னுடைய இந்த மோசமான அனுபவம் குறித்து பதிவு செய்துள்ள அந்த நபர் பெங்களூர் நகரில் நாம் நடந்த செல்வதற்கு பாதுகாப்பில்லை என கூறியுள்ளார்.
மேலும் அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உங்களுக்கு கமிஷனரை தெரிந்தாலும் சரி எஸ்பி-ஐ தெரிந்தாலும் சரி அவர்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார்களாம். இதனை அடுத்து அந்த நபர் உடனடியாக காவல்துறை அவசர அழைப்பு எண் 112-ஐ அழைத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அங்கே வந்த போது அவர்கள் அந்த சூழ்நிலையை கட்டுப்படுத்தாமல் இந்த நபரையே குறை கூறியதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினரும் ஆட்டோ ஓட்டுநரும் நண்பர்களாக இருந்ததால் அவர்களுக்குள் சமாதானமாகி கொண்டு இவரை முதலில் அந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என கூறி இருக்கிறார்கள்.
ஆட்டோ ஓட்டுநர்களின் இது போன்ற ஒரு நடத்தையை நான் முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது . பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து பல்வேறு நபர்களும் தங்களுடைய அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications