பெங்களூருவில் வீடு வாங்க விரும்புவோர், தற்போது புதிய பிரச்சனையை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது. இங்கு ஏற்கனவே வீடுகளின் விலை மிக அதிகமாக இருக்கும். இந்த சூழலில், இடைத்தரகர்கள் வீட்டின் விலையை மேலும் உயர்த்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ரெடிட் (Reddit) இணையதளத்தில் பல பயனர்கள் கூறியுள்ள தகவலின் படி, இடைத்தரகர்கள் (brokers) வீடுகளின் உண்மையான விலையை மறைத்து, அதிக விலைக்கு மக்களை வாங்க வைப்பதாகவும், இதன் மூலம் அவர்கள் பெரியளவில் லாபம் சம்பாதிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளனர்.
வீடு விற்பனையில் வெளிப்படையான தகவல்கள் இல்லாததால், பொதுமக்கள் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நேரடி தொடர்பு இல்லாமல், இடைத்தரகர்கள் நுழைந்துவிடுவதால், வீட்டின் விலை மேலும் அதிகரிக்கிறது. இதனால், பெங்களூருவில் வீடு வாங்குவது என்பது ஒரு பெரிய நிதிச்சுமையாக மாறியுள்ளது.

ரெடிட் தளத்தில் பயனர் ஒருவர், "ஒரு வீட்டு உரிமையாளர், தனது சொத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக இணையதளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார். ஆனால், அதே வீட்டை இடைத்தரகர் ஒருவர் 40% அதிக விலைக்கு வைத்து ஒரு பிரபலமான ரியல் எஸ்டேட் இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். இது சந்தையில் நடக்கும் ஒருவகை மோசடி போலவே தெரிகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரே சொத்து பல வலைதளங்களில், பல விலைகள் வைத்து இடைத்தரகர்களால் பதிவிடப்படுவதால், வீட்டின் உண்மையான உரிமையாளர் யார்..? உண்மையான விலை என்ன..? என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்வது கடினமாகிறது.
மேலும், அதே பயனர், "சிறிய பகுதிகளிலும் கூட பல இடைத்தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு வீட்டின் விலை குறித்து எந்த தகவலும் நேரடியாக கிடைப்பதில்லை. எல்லாமே இடைத்தரகர்கள் மூலம் தான் நடைபெறுகிறது. இதனால், வீட்டின் உண்மையான விலையை தெரிந்து கொள்வது மிகவும் சவாலானதாக இருக்கிறது. ஒரே சொத்தை பல விலையில் பார்க்கும்போது, வாடிக்கையாளர்கள் யாரை நம்புவது என்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவில் ரியல் எஸ்டேட் சந்தை மந்தமான நிலைமையில் இருந்தாலும், இடைத்தரகர்கள் ஒரு பெரிய அளவிலான விற்பனை வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது வருமானத்தை ஈட்ட முயற்சிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்த முறை வாடிக்கையாளர்களுக்கு நியாயமற்றதாக தோன்றினாலும், இடைத்தரகர்களை பொறுத்தவரை வர்த்தக நோக்கில் இது ஒரு தத்தளிக்கும் சந்தையில் உயிர் வாழும் வழி என நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஒரு பயனர் கூறுகையில், "பல வீட்டு உரிமையாளர்கள் தாங்களாகவே வீடு வாங்குபவர்களை கண்டுபிடிக்க முடியாது. எனவே, அவர்கள் எதிர்பார்க்கப்படும் விலையில் வீட்டை விற்பனை செய்வதற்காக இந்த பொறுப்பை இடைத்தரகர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். பிறகு அந்த சொத்து எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்பதைக் குறித்து தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவது இல்லை" என்று பதிவிட்டுள்ளார். இதனால், இடைத்தரகர்கள் தங்கம் இஷ்டத்திற்கு ஒரு தொகையை நிர்ணயிக்கின்றனர். இதுவே சந்தையில் வெளிப்படைத்தன்மை குறைவதற்கும், உண்மையான விலை நிர்ணயம் மங்குவதற்கும் முக்கிய காரணமாக உள்ளது.
மேலும் இது, வீட்டின் உண்மையான சந்தை மதிப்பு எவ்வளவு என்பதை வாடிக்கையாளர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. இதன் விளைவாக, ரியல் எஸ்டேட் சந்தையில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போய்விட்டது. வீட்டின் உண்மையான விலை எவ்வளவு..? யாரிடம் நம்பிக்கையுடன் பேசுவது..? என்பதை அறிய முடியாமல் மக்கள் குழப்பமடைந்து விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications