கர்நாடகத் தலைநகரான பெங்களூரு இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறது. இங்குள்ள ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியூர்க்காரர்கள் டிரான்ஸபர் கேட்டுத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.
இந்த மோசமான நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் கார்ப்பரேஷன் அதிகாரிகள் திணருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை கட்டுமான பணிகளுக்காக விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் நகரில் கட்டுமான துறையில் ஏற்பட்டு உள்ள தேக்க நிலையை ஒரளவுக்கு சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கான்பெடரேஷன் ஆப் ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியாவுடன் பெங்களூரு குடிநீர் வழங்கல் துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் இதுவரை 62 லட்சம் லிட்டர் மறுசுழற்சி தண்ணீர் கேட்டு ஆர்டர் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து இந்தத் தண்ணீர் தேவை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் குடிநீர் வழங்கல் துறைக்கு வருவாய் வருவது மட்டுமல்லாமல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் உடன் இணைந்து விநியோகத்தை சீரமைக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் அபார்ட்மென்ட்கள் தங்களது மறுசுழற்சி தண்ணீரில் 50 சதவீதத்தை விற்பதற்கு குடிநீர் வழங்கல் துறை அனுமதி தந்துள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்களைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவுக்கு தனியாக குழாய்கள் அமைத்து சுத்திகரித்த நீரை விநியோகம் செய்யவும் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
பெங்களூரில் சில அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ்களில் உபரி தண்ணீரை விற்று வருகின்றனர். ஒரு டேங்கருக்கு ரூ.100 முதல் ரூ.125 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் டேங்கர்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஓரளவுக்குத் தான் அனுப்ப முடிகிறது.
அதேநேரத்தில் டேங்கர்களில் அனுப்பப்படும் தண்ணீரில் மாசு கலக்கும் வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் யோசிக்கின்றனர். பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்புடன் இந்த பிரச்னையை தீர்க்க குடிநீர் வழங்கல் துறை கூட்டங்களை கூட்டியுள்ளது.
பன்னர்கட்டா சாலையில் உள்ள தெற்கு நகர பராமரிப்பு சமூகத்தின் தலைவர் ராஜகோபாலன் தங்கள் வளாகத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஒரு டேங்கருக்கு 125 ரூபாய்க்கு விற்பதாகவும், வாடிக்கையாளர்கள் தங்கள் போக்குவரத்தை ஏற்பாடு செய்தால் அவர்களுக்குத் தரத் தயார் என்றும் தினசரி சுத்திகரிக்கப்பட்ட 9 லட்சம் லிட்டர் தண்ணீரில், 5 லட்சம் லிட்டர் தாங்கள் பயன்படுத்துவதாகவும், உபரியை ஆர்வமுள்ளவர்களுக்கு விற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை சுகாதார அபாயங்களை ஏற்படுத்துகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் மாதத்தில் இயல்பான மழைப்பொழிவைக் கணித்துள்ளது, முதன்மையாக வடமேற்கு, மத்திய மற்றும் வட தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில், கடலோரப் பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications