கர்நாடக மாநிலம் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்று, மேலும் இந்தியாவிலேயே மோசமான டிராபிக் பிரச்சினைகளுக்கு பெயர்பெற்ற நகரம். இங்கு வாடகை கார் பயன்பாடு அதிகம், ஆன்லைன் வாடகை கார் ஓலா, உபேர் போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக சொந்தமாக நானோ டிராவல்ஸ் என்ற ஒரு ஆப்பை நடத்தி வருகிறார். மேலும் ஆப்பிள் போனிலும் பதிவேற்றம் செய்யும் அந்த ஆப்பின் ஐஓஎஸ் வெர்சனையும் அறிமுகம் செய்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஒரு இடத்துக்கு செல்வதற்காக உபேர் செயலியில் கார் புக் செய்துள்ளார். அந்த காரில் பயணம் செய்யும் போது, அந்த காரின் டிரைவர் அவரிடம், தான் சொந்தமாக ஒரு ஆப்பை செயல்படுத்தி வருவதாகவும், தேவைப்பட்டால் தன்னை அழைக்கும்படி அது தொடர்பான விளம்பர துண்டுபிரசுரத்தை கொடுத்துள்ளார்.
டிரைவரின் முயற்சி அவரை மிகவும் கவர்ந்தது. இதனையடுத்து இந்த தகவலை அந்த நபர் பெங்களூரு மேன் என்ற எக்ஸ் கணக்கில் பகிர்ந்தார். எக்ஸில், டிரைவர் அளித்த துண்டுபிரசுரத்தை போட்டோ எடுத்து பதிவேற்றம் செய்து இருந்தார்.
மேலும், பெங்களூரு பீக்: உபேர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு போட்டியாக தனது சொந்த செயலியை தொடங்கியுள்ளதாகவும், ஏற்கனவே தனது செயலியில் 600க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இருப்பதாகவும் எனது உபேர் கார் டிரைவர் லோகேஷ் என்னிடம் தெரிவித்தார்.
இன்று அவர்கள் ஆப்பிள் போன்களுக்கான ஐஓஎஸ் வெர்சனையும் அறிமுகம் செய்துள்ளார்கள் என்று பதிவு செய்து இருந்தார். அந்த சின்ன விளம்பர பிரசுரத்தில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஆஃபர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நானோ டிராவல்ஸ் என்ற செயலின் பெயர், வாடிக்கையாளர் சேவை எண் மற்றும் இமெயில் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இதனை பார்த்து பலர் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்தனர். போட்டியை எதிர்கொண்டு நானோ டிராவல்ஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் லோகேஷின் முயற்சியை உண்மையான தொழில்முனைவோருக்கு உதாரணமாக மற்றவர்கள் கருதினர். நிச்சயமாக அவரை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் என்று ஒருவர் பதிவு செய்து இருந்தார். மற்றொருவர் லோகேஷை ஏற்கனவே சந்தித்து உள்ளதாகவும், அவர் ஆர்வமுள்ள மனிதர் என்று தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications