சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சிஇஓ, தனக்கு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால் 70 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படியொரு நிலை வந்தாலும்.. அதை அவர் கையாண்ட விதம் தான் பலருடைய கவனத்தை ஈர்த்து, அவருக்கு பாராட்டைப் பெற்று தந்தது. பணி நீக்கம் செய்ததோடு நின்றுவிடாமல் எந்தெந்த ஊழியர்கள் வேலை இழந்தார்களோ? அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தர பல முயற்சிகளை செய்துள்ளார். சில ஊழியர்களுக்கு வேலையும் பெற்று தந்துள்ளார்.
ஓகே கிரெடிட் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஹர்ஷ் போகர்னா, நிதி நெருக்கடி காரணமாக தனது நிறுவனத்தில் இருந்து 70 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை தனது லிங்க்டின் தளத்தில் பகிர்ந்திருந்தார். தனது லிங்க்டின் பக்கத்தில் ஹர்ஷ், "18 மாதங்களுக்கு முன்பு நாங்கள் 70 பேரை பணி நீக்கம் செய்தோம். அது எப்படி நடந்தது தெரியுமா? நாங்கள் அதிக செலவு செய்தோம். மிக வேகமாக பணியாளர்களை சேர்க்க தொடங்கினோம். அதுதான் எங்கள் தவறு. எங்கள் தவறை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டு நான் செய்த மோசமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் அதை சரியான முறையில் செய்யத்தான் முயற்சி செய்தோம். பணி நீக்கத்திற்கு பிறகு 70 ஊழியர்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட முறையில் சேட் செய்தேன். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கினேன். நாங்கள் அவர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்தோம். புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்க அனைத்தையும் செய்தோம். பணிநீக்கம் செய்யப்படுவதற்குள் 67 பேர் புதிய வேலைக்குச் சென்றனர்.
வேலையில்லாமல் இருந்த 3 பேருக்கு 2 மாத சம்பளத்தை கூடுதலாக வழங்கியுள்ளோம். பொதுவாக வேலை இழப்புகளால் பாதிக்கப்பட்ட பல ஊழியர்களுக்கு நிறுவனத்தின் தரப்பில் இருந்து அழைப்பு கூட வராது. வெறும் மெயில் மூலமாக மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி அனுப்பப்படும். இது மனிதாபிமானமற்றது. பணி நீக்கங்கள் பல நிறுவனங்களில் நடக்கின்றன. ஆனால் அதை எப்படி கையாள்வது? என்பதுதான் நிறுவனத்தின் கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும்.
ஒரு நபரை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் போது ஃபேமிலி என்று தானே அழைக்கிறோம். அவர்களை பணிநீக்கம் செய்யும்போது மட்டும் குடும்பத்தினரை போல நடத்தாமல் இருக்க முடியுமா? என்று ஹர்ஷ் எழுதியிருந்தார். இவருடைய பதிவு விரைவில் பிரபலமடைந்தது. பலர் ஹர்ஷின் முன் முயற்சியைப் பாராட்டினர்.
வணிக உலகில் மனிதநேயத்தின் முக்கியத்துவம் என்ன? என்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். ஹர்ஷ் போன்ற நிறுவனர்கள் கடினமான சூழ்நிலையிலும் ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டுவது நிறுவனத்தின் மதிப்பை மட்டுமல்லாமல் சமூகத்தின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இது போன்ற செயல்களை வணிக உலகில் அதிகரிக்க தொடங்கினால் வேலை இழப்பால் தவிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications