பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் வழித்தடத்தை மேலும் 197 கிலோமீட்டர் நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டு இருக்கிறது.
பெங்களூரு போன்ற நகரங்களில் நாம் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்கு மெட்ரோ ரயில்கள் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. பெங்களூருவை பொறுத்தவரை நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு புகழ்பெற்ற பெங்களூரு நகருக்கு மெட்ரோ ரயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூடுதல் வழித்தடங்களை ஏற்படுத்தி மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வதற்கு பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி பெங்களூரு நகரில் கூடுதலாக 197 கிலோமீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட இருக்கிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும் பணிகளை பெங்களூரு மெட்ரோ கழகம் தீவிரப்படுத்தி இருக்கிறது.
தற்போது விமான நிலையம் வரை செல்லக்கூடிய பாதையை தேவனஹள்ளி வரையில் நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறு ஆய்வுகள் இதில் இடம்பெற இருக்கின்றன. அண்மையில் முதலமைச்சர் சித்தராமையா கூட கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.
வரும் ஜூலை மாதத்திற்குள் இந்த சாத்தியக்கூறு ஆய்வறிக்கை நடத்தி முடிக்கப்படும் என பெங்களூரு மெட்ரோ ரயில் கழக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையானது மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்துள்ளது. அரசு எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வது அவசியம் என்பதை முடிவு செய்து இதற்கு ஒப்புதல் அளிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆய்வு அறிக்கைகளில் இருந்து 50% வழித்தடங்களை அரசு தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 95 லிருந்து 100 கிலோமீட்டர் வரையிலான பாதைக்கு அரசு ஒப்புதல் வழங்கும் என்றும் இதன் மூலம் எதிர்காலத்தில் பெங்களூருவில் மெட்ரோ ரயில் வழித்தடம் 350 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக விரிவாக்கம் அடையும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையில் இந்த பகுதிகளில் எல்லாம் சாலை போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கிறது, இங்கே ரயில் நிலையங்களை அமைப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெறும்.
பெங்களூருவை பொறுத்தவரை தற்போது மஞ்சள் பாதைக்கான கட்டுமான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், ஆர்வி சாலையில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் இது பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல பிங்க் பாதையில் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications