பெங்களூரை தளமாக கொண்ட மென்பொருள் பொறியாளர் ஒருவர், அதிக சம்பளத்தை விட மன நிம்மதி மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை தேர்ந்தெடுத்தது குறித்து லிங்க்ட்இன் (LinkedIn) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஷுபம் சோனி என்ற அந்த ஊழியர், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சற்றே குறைவான சம்பளத்தில், சொந்த ஊரில் இருந்து பணிபுரியும் (Work-from-Home) ஒரு பணியை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த முடிவுக்கு வர தான் சிரமப்பட்டாலும், இப்போது அதுவே தனக்கு மன நிறைவை தருவதாக அவர் கூறியுள்ளார்.

பெரிய மெட்ரோ நகரங்களில் ரூ.1 முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பளத்திற்காக அலைவதை விட, வீட்டில் இருந்தே ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை சம்பாதிப்பது மிகவும் சிறந்ததாக உணர்கிறேன் என்று சோனி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவுக்கு வருவதற்கு முன், தனது தொழில் வளர்ச்சி, எதிர்கால சம்பள உயர்வுகள் மற்றும் புகழ்பெற்ற ஒரு பிராண்டின் பெயரை விட்டு விலகுவது குறித்தும் தான் கவலைப்பட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் வருத்தப்படவில்லை. பெங்களூருவில் நான் தனியாக வாழ்ந்தேன். இப்போது குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சியாக உள்ளேன். அந்த நிம்மதி விலைமதிப்பற்றது என்று அவர் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டுள்ளார். வேலையும், லட்சியமும் முக்கியம்தான் என்றாலும், வாழ்க்கையில் மன நிம்மதியுடன் இருப்பதுதான் மிக முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பங்களும் கண்ணோட்டமும் உண்டு, அது முற்றிலும் சரியானதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சோனியின் இந்தப் பதிவு பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அவரது நேர்மை மற்றும் கண்ணோட்டத்தைப் பலரும் பாராட்டியுள்ளனர். "இதுதான் உண்மையான பெருமை. குடும்பத்துடன் வாழ்வது, மாதம் ரூ.80,000 சம்பாதிப்பது" என்று ஒரு பயனர் கருத்துத் தெரிவித்தார். மற்றொருவர், "பணத்தை விட மன நிம்மதியே முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சில பயனர்கள் சோனியின் இந்த முடிவை, "வாழ்க்கையிலும், வேலையிலும் எது முக்கியமானது என்பதை நினைவூட்டதாக கூறியுள்ளனர். இது வெற்றியை நமது சொந்த வரையறைகளில் மறுவரையறை செய்வதற்கான ஒரு நினைவூட்டல் என்றும் மன நிம்மதி என்பது ஒரு பின்னடைவு அல்ல. சில சமயங்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மிக சிறந்த பதவி உயர்வு இதுதான்" என்றும் சிலர் கூறியுள்ளனர்.
ஆனாலும், இந்தப் பதிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை. மெட்ரோ நகரப் பணிகள்தான் இணையற்ற அனுபவத்தையும், தொழில் வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்று சிலர் சுட்டிக்காட்டினர். மன நிம்மதியும் குடும்ப நேரமும் மிக முக்கியம்தான். ஆனால் மெட்ரோ நகரப் பணிகளில் கிடைக்கும் வளர்ச்சி உங்கள் தொழிலை வலிமையான வழிகளில் வடிவமைக்க உதவும் என்று சிலர் மாறுபட்ட கருத்தை பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications