பொதுவாக வீட்டுப் பணியாளர்களுக்கு சில நூறு ரூபாய்க்கு கூட பேரம் பேசும் வழக்கம் இந்தியாவில் இருக்கும் நிலையில், பெங்களூருவில் வசிக்கும் ரஷ்யப் பெண் ஒருவர், தனது வீட்டுப் பணியாளருக்கு கொடுத்து வரும் சம்பளம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐயூலியா அஸ்லமோவா என்ற அந்தப் பெண், தனது பணிக்கு சுமார் ரூ.45,000 மாதச் சம்பளம் வழங்குவதாகவும், ஆண்டு சம்பள உயர்வு, கார் ஓட்டும் பயிற்சி ஆகியவற்றையும் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இந்தியர்கள் வீட்டு வேலை செய்பவர்களை நடத்தும் விதம் குறித்துப் பரவலான விவாதத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு கிளப்பியுள்ளது. எந்த ஒரு வேலையையும், எந்த ஒரு நபரின் உழைப்பையும் உங்கள் சொந்தத் தொழிலுக்குக் கொடுக்கும் அதே மரியாதையுடனும், தொழில்முறை அணுகுமுறையுடனும் நடத்த வேண்டும் என்பதே ஐயூலியாவின் முதன்மையான கொள்கையாக உள்ளது.

தனது மகளுக்காக பணிக்கு ஆள் எடுத்தபோது, 20 நேர்காணல்கள், ஒரு விரிவான சரிபார்ப்புப் பட்டியல் என மிகத் தீவிரமாகச் செயல்பட்டதாக ஐயூலியா கூறியுள்ளார். தனது குழந்தையின் நலனுக்காகப் பணத்தை மிச்சப்படுத்துவதை விட, பணியாளரின் மனநிலை, மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க அவர் முடிவு செய்தார். நமது மகளின் நலனுடன் ஒப்பிடும்போது, அதிகச் சம்பளம் என்பது அவ்வளவு பெரியதல்ல என்று ஐயூலியா கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் பகுதி நேரமாக இருந்த இந்த வேலை விரைவில் ஒரு நீண்டகாலப் பங்களிப்பாக மாறியது. முதல் ஆண்டுக்குப் பிறகு 10% சம்பள உயர்வு அந்தப் பணியாளருக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில், சிறந்த செயல்பாட்டிற்காக மேலும் சம்பாதிக்க வசதியாக, KPI எனப்படும் செயல்திறன் குறியீடு முறையை அறிமுகப்படுத்தினார். 3-வது ஆண்டில், அந்தப் பணி முழு நேரமாக மாறியது. சம்பளம் 1.7 மடங்கு உயர்த்தப்பட்டதுடன், மகளைப் பள்ளியில் விடுவதற்காக கார் ஓட்டும் பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டது.
பலரும் "வேலைக்காரர்கள் ஓடிவிடுகிறார்கள்" என்று புகார் கூறுவது உண்டு. ஆனால், அவர்கள் நடத்தப்படும் விதம்தான் உண்மையானப் பிரச்சனை என்று சுட்டிக்காட்டுகிறார் ஐயூலியா. கண்ணியமும், நியாயமான ஊதியமும் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில், 2025ஆம் ஆண்டு பெங்களூருவில் வாழ்க்கைச் செலவு பல ஐரோப்பிய நகரங்களுக்கு இணையாக உயர்ந்துள்ளது. உடற்பயிற்சி, உணவு, உளவியல் ஆலோசகர் போன்ற தனிப்பட்ட செலவுகளுக்கு ஒருவருக்கு ரூ.25,000 முதல் ரூ.35,000 போதுமானதாக இருந்தாலும் பள்ளி, பயிற்சி வகுப்புகள், வீட்டுப் பணியாளர்கள் உட்பட 3 பேர் கொண்ட குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளே மாதத்திற்கு சுமார் ரூ.2.5 லட்சம் வரை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஐயூலியாவின் இந்த அணுகுமுறை, அனைத்து உழைப்பிற்கும் உரிய மரியாதை மற்றும் நியாயமான ஊதியம் வழங்குவதன் முக்கியத்துவத்தை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications