பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில் டிரோன்கள் மூலம் டெலிவரி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
பெங்களூரு நகரம் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போனது. இந்த நிலையில் ஸ்கை ஏர் (Skye Air) என்ற நிறுவனம் பெங்களூருவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியிருக்கிறது. கொனன்குண்டே மற்றும் கனகபுரா சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் முதல் கட்டமாக டிரோன் டெலிவரி சேவையை தொடங்கி இருப்பதாக ஸ்கை ஏர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்கித் குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெங்களூரு வாசிகள் தங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை ஏழு நிமிடங்களிலேயே டிரோன்கள் மூலம் டெலிவரி பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்.

ஏற்கனவே இந்தியாவின் குருகிராம் நகரில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் சேவை தொடங்கிவிட்டது. தற்போது அதன் விரிவாக்கமாக தான் பெங்களூருவிலும் இது கொண்டுவரப்பட்டிருக்கிறது. குருகிராமில் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறும் அங்கித் குமார் குருகுராமில் தங்களுடைய நிறுவனம் மூலம் ஒரு மில்லியன் டெலிவரி என்ற சாதனையை கடந்த ஆண்டு எட்டியதாக கூறியிருக்கிறார். இதுவே தங்கள் சேவையை பெங்களூருக்கும் விரிவாக்கம் செய்ய ஊக்குவித்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
டிரோன்களை கடல் மட்டத்திலிருந்து 120 மீட்டர் வரை பறக்க செய்வதற்கு தங்கள் நிறுவனம் அனுமதி பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார் . ராணுவ தளவாடங்களுக்கு அருகே டிரோன் பறக்க தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். டிரோன் டெலிவரி சேவையால் விமான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் இதற்காக ஒருங்கிணைந்த ஒரு மேலாண்மை நடைமுறையை தங்கள் நிறுவனம் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
10 கிலோ கிராம் வரை எடை கொண்ட பொருட்களை சுமந்து சென்று டெலிவரி செய்யும் திறன் கொண்டவை இந்த டிரோன்கள் என கூறியுள்ளார். விரைவில் இந்தியாவில் டெலிவரி துறை குறிப்பாக பெருநகரங்களில் டெலிவரி துறை டிரோன்கள் ஆதிக்கம் நிறைந்த துறையாக மாறும் என கூறியிருக்கிறார். பாரம்பரிய டெலிவரி முறையுடன் ஒப்பிடும்போது டிரோன் டெலிவரிகள் மூலம் ஒவ்வொரு டெலிவரி சேவையிலும் 520 கிராம் கார்பன் வெளியீடு குறைவதாக அங்கித் குமார் கூறுகிறார்.
ப்ளூடார்ட், டிடிடிசி , ஷிப் ராக்கெட் மற்றும் இ காம் எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய பொருட்களை டிரோன்கள் மூலம் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார் . 2019ஆம் ஆண்டில் ஸ்கை ஏர் நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் மலைப்பாங்கான இடங்களில் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் நோக்கில் தான் டிரோன் சேவையை தொடங்கியது இந்நிறுவனம்.
தற்போது இந்த நிறுவனம் பெங்களூருவில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது கூடிய விரைவில் உணவு டெலிவரியிலும் இறங்கப் போவதாக ஸ்கை ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications