கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில் (Bengaluru), பைக் டாக்சி சேவைகளுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று பைக் டாக்சி சேவைக்கு முன்பு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. இந்த முடிவு ரேபிடோ, உபர் போன்ற நிறுவனங்களுக்கும், ஆயிரக்கணக்கான பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே நேரம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கங்கள் இதை எதிர்த்து வருகின்றன.
தடை எப்போது விதிக்கப்பட்டது?
2025 ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பைக் டாக்சி சேவைகளுக்கு முழு தடை விதித்தார். மாநில அரசு இதற்கு தெளிவான விதிமுறைகளை உருவாக்கும் வரை சேவைகளை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்படி 2025 ஜூன் 16 முதல் தடை அமலுக்கு வந்தது. இதனால் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வருமானத்தை பாதித்தது.

உயர் நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 2026) தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி அடங்கிய அமர்வு இந்த தடையை ரத்து செய்தது. ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றம் மோட்டார் வாகன சட்டம் 1988-ஐ அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தது. பைக் டாக்சி சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் "டிரான்ஸ்போர்ட் வாகனங்கள்" என்ற வரையறைக்குள் வருவதாக கூறியது. எனவே, வாகனம் இருசக்கர வாகனம் என்பதால் மட்டும் அனுமதி மறுக்க முடியாது என்று தீர்ப்பு அளித்தது.
அனுமதி விண்ணப்பிக்கும் உரிமை
பைக் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை டிரான்ஸ்போர்ட் வாகனங்களாக பதிவு செய்ய விண்ணப்பிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. பதிவு செய்த பிறகு கான்ட்ராக்ட் கேரேஜ் அனுமதி (contract carriage permit) பெறலாம். இது வணிக பயணிகள் சேவைக்கு அனுமதி அளிக்கும்.
அரசு பாதுகாப்பு, ஃபிட்னஸ், இன்சூரன்ஸ் போன்ற அனைத்து சட்ட நிபந்தனைகளை ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
வரவேற்பு
ரேபிடோ நிறுவனம் இந்த தீர்ப்பை வரவேற்றது. நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு இது முக்கிய படி என்று கூறியது. மலிவு, பாதுகாப்பு, வேகமான பயணம் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு பைக் டாக்சி மிகவும் முக்கியமான என்று ரேபிடோ நிறுவனம் தெரிவித்தது.
உபர் நிறுவனமும் இதை வரவேற்றது. இந்திய நகரங்களில் பைக் டாக்சி முக்கிய போக்குவரத்து வசதி என்று கூறியது. பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இது பெரும் நன்மை என்று தெரிவித்ததுள்ளது.
ஆனால் கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்கள் கவலை தெரிவித்தது. பர்சனல் இருசக்கர வாகனங்களை பைக் டாக்சியாக அனுமதிப்பது சரியா என்று கேள்வி எழுப்பியது. போக்குவரத்து துறை தெளிவான கொள்கை வகுக்கும் வரை இதை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியது.
பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரங்களில் மக்களுக்கு விரைவான, மலிவான போக்குவரத்து வசதியை உருவாக வேண்டுமெனில் பைக் டாக்சி போன்றவை அவசியம்.


Click it and Unblock the Notifications