இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ கடந்த 2 வருடமாக பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில் ஸ்ரீனி பலியா நியமிக்கப்பட்ட பின்பு உயர் அதிகாரிகள் வெளியேறுவது பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் விப்ரோ நிர்வாகம் தனது வளர்ச்சிக்கான அடுத்தக்கட்ட பணிகளை செய்து வருகிறது.
இதன் அடிப்படையில் விப்ரோ மாசசூசெட்ஸை தலைமையிடமாக கொண்ட IT சேவை நிறுவனமான அப்ளைடு வேல்யூ டெக்னாலஜீஸை (AVT) என்னும் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனத்தை சுமார் 40 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் வாங்கவும், இந்த கைப்பற்றும் திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

அப்ளைடு வேல்யூ டெக்னாலஜீஸ் நிறுவனம் மிகவும் கஸ்டமைஸ் மற்றும் தரவு-சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி IT செயல்பாடுகளை மாற்றியமைப்பதில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனத்தின் சேவைகள், கட்டமைப்புகள் விப்ரோ-வின் அனைத்து பிரிவுகளிலும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சேவையாக அளிக்க உள்ளது. இதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல புதிய வாய்ப்புகள் வரும் எனவும் விப்ரோ நம்புகிறது.
அப்ளைடு வேல்யூ டெக்னாலஜீஸ் கையகப்படுத்தும் திட்டத்தின் இறுதியில் 40 மில்லியன் டாலர் வரையிலான தொகையை விப்ரோ செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதேபோல் இந்த ஒப்பந்தத்தில் சில முக்கியமான கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளது.
2021 மற்றும் 2022 க்கு இடையில் நிறுவப்பட்ட அப்ளைடு வேல்யூ டெக்னாலஜீஸ் தற்போது மாசசூசெட்ஸ், சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் அலுவலகங்களை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது. இந்த துணை நிறுவனங்கள் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன.
அப்ளைடு வேல்யூ டெக்னாலஜீஸ் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் நிதியியல் அடிப்படையில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 2021 இல் 0.8 மில்லியன் டாலரிலிருந்து 2022 இல் 8.7 மில்லியன் டாலராக அதிகரித்து, 2023 இல் மேலும் 19.4 மில்லியன் டாலராக அதிகரித்தது.
இதன் மூலம் அப்ளைடு வேல்யூ டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சேவைகளுக்கு சந்தையில் பெரும் டிமாண்ட் இருப்பது உறுதியாகியுள்ளது. இதோடு இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ பங்குகள் 0.10 சதவீதம் மட்டும் சரிந்து 308.80 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications