பெங்களூரு: பெரிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரத்தை குறைப்பது மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை எளிதாக்குவதோடு பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். அந்த வகையில் மத்திய அரசு தற்போது தென் மாநிலங்களில் இருக்கும் முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலைகளை இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பெங்களூரு - ஹைதராபாத் நெடுஞ்சாலையை 12 வழி சாலையாக உயர்த்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. NH44 என அறியப்படக்கூடிய இந்த நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலையாக செயல்படுகிறது. இது 12 வழி பாதையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு இடைப்பட்ட போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்டவை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் மூலம் பயண நேரம் குறையும் என்பது கூடுதல் சிறப்பு.

ஆந்திரா மாநிலத்தின் ராயல்சீமா பகுதிக்கு உட்பட்ட கர்னூல், அனந்தபூர் ஆகிய பகுதிகளில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும் என்றும் இந்த ஊர்களில் இருந்து பெரும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பு அதிகரித்து சரக்கு போக்குவரத்து எளிதாகும் ன சொல்லப்படுகிறது.
இதுபோன்ற சிறந்த உள் கட்டமைப்புகள் இருக்கும்போது இந்த சாலை அமைந்துள்ள பகுதிகளில் எல்லாம் பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் , இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் உருவாகி பிராந்திய அளவிலான பொருளாதாரம் வளர்ச்சிக்கு வித்திடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசோடு இணைந்து ஆந்திர பிரதேச மாநில அரசு இந்த திட்டத்திற்கான நிதி மற்றும் திட்ட செயலாக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நிலையான நீடித்தன்மை கொண்ட நெடுஞ்சாலையாக இது இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது.
முன்னதாக பெங்களூரு - சென்னை இடையிலான எக்ஸ்பிரஸ்வே வரும் டிசம்பர் மாதத்திற்குள் திறந்து வைக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இந்த எக்ஸ்பிரஸ் வே பயன்பாட்டுக்கு வரும் போது பெங்களூரு சென்னை இடையிலான போக்குவரத்து நேரம் 2.15 மணி நேரங்களாக குறைந்துவிடும். இதனால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் பயனடைய இருக்கின்றன.
பெங்களூருவுடன் சென்னையை இணைக்கும் சாலை கூடிய விரைவில் திறக்கப்படும் நிலையில், ஹைதராபாத்துடன் இணைக்கப்படும் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இது பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவியாக இருக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications